சென்னை: இடஒதுக்கீடு மாநிலங்களின் உரிமை என்று அதிகாரத்தை மாற்றி வழங்கினால் தான், அந்தந்த மாநிலங்கள் தங்கள் மாநில மக்களுக்கு உரிய இடஒதுக்கீட்டினை வழங்க முடியும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பின் இரண்டாவது தேசிய மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கலந்து கொண்டு, காணொலிக் காட்சி வாயிலாகத் தலைமையுரை ஆற்றினார். அவர் பேசியதாவது: சமூகநீதியை முறையாக பா.ஜ. அமல்படுத்துவது இல்லை. கடந்த 9 ஆண்டு காலத்தில் ஒன்றிய அரசின் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு ஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படவில்லை. திடீரென்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் வரப்போவதால் விளிம்புநிலை மக்களை ஏமாற்றுவதற்கு இப்போது மோகன் பகவத் இப்படி சொல்கிறாரே தவிர, உள்ளார்ந்த ஈடுபாடு காரணமாக அவர் சொல்லவில்லை.
சமூகநீதி என்பது ஒரு மாநிலத்தின் பிரச்னை அல்ல. அனைத்து மாநிலங்களின் பிரச்சினை. குறிப்பாக பா.ஜ. ஆட்சியில் இருக்கும் போது இது அகில இந்தியாவிற்கும் பொதுவான பிரச்சினை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் சாதி – வகுப்பு அளவீடுகள் வேறுபடலாம். எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு செயல்பாட்டில் இருக்கிறது. அதேபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் இடஒதுக்கீடு வெவ்வேறு விழுக்காடாக இருந்தாலும், பிரச்சினை ஒன்றுதான். அதுதான் புறக்கணிப்பு. எங்கெல்லாம் புறக்கணிப்பு ஒதுக்குதல் தீண்டாமை அடிமைத்தனம் அநீதி இருக்கிறதோ அங்கெல்லாம் அதனை முறிக்கும் மருந்தாக இருப்பதுதான் சமூகநீதி.
எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி ஊழியர்கள் மற்றும் பணியாளர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு ஒரு சமூகநீதிக் குழு இருக்க வேண்டும். 50 விழுக்காடு என்றுள்ள இடஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ளது போல், ஒன்றிய அளவில், ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு முழுமையாகச் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்திட, அகில இந்திய அளவில் சமூகநீதிக் கண்காணிப்புக் குழுவினை நியமிக்க வேண்டும். இவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் செயல்படுத்திக் காட்ட வேண்டும்.
அதிலும் குறிப்பாக, மிக முக்கியமாக இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநிலங்களிடம் இருக்க வேண்டும். தமிழ்நாடு மாநிலத்தில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. சில மாநிலங்களில் 50 விழுக்காடு உள்ளது. அந்தந்த மாநிலங்களின் மக்கள் விகிதாச்சாரம் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். எனவே, 50 விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீடு அளவீடு போகக் கூடாது என்று சொல்வதும் சரியல்ல. இடஒதுக்கீடு மாநிலங்களின் உரிமை என்று அதிகாரத்தை மாற்றி வழங்கினால்தான், அந்தந்த மாநிலங்கள் தங்கள் மாநில மக்களுக்கு உரிய இடஒதுக்கீட்டினை வழங்க முடியும். இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறினார்.
இதில், அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.வில்சன், ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, மாநாட்டில் பங்கேற்று சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய மகாராஷ்டிரா மாநில உணவுத்துறை அமைச்சர் சாகன் புஜ்பால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராம் கோபால் யாதவ், திருமாவளவன், சஞ்சய் சிங் , டாக்டர் கே.கேசவ ராவ், பிரியங்கா, மஸ்தான் ராவ், ஜவஹர் சிர்கர், வந்தனா ஹேமந்த் சாவன், மனோஜ்குமார், ஜான் பிரிட்டஸ், திருச்சி சிவா, ஆ.ராசா மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.