பாட்னா: பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை கடந்த மாதம் 2ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், சட்டப்பேரவையில் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று பேசுகை யில், “சமீபத்திய சாதிவாரி கணக்கெடுப்பின்படி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுகளின் துணைக்குழு உள்ளிட்ட ஓபிசி பிரிவினர் மாநிலத்தின் ஒட்டு மொத்த மக்கள்தொகையில் 63 சதவீதம் உள்ளனர்.
அதே நேரம் எஸ்சி, எஸ்டி பிரிவினர் 21 சதவீதத்துக்கும் சற்று கூடுதலாக உள்ளனர். இதன் அடிப்படையில், தற்போது 17% ஆக இருக்கும் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களின் இடஒதுக்கீடு 22% ஆக உயர்த்தப்படும். அதே போன்று, தற்போது 50% ஆக இருக்கும் ஓபிசி பிரிவினரின் இடஒதுக்கீடு 65% ஆக உயர்த்தப்படும். தகுந்த பரிசீலனைக்கு பிறகு தற்போது நடைபெறும் கூட்டத் தொடரில் இதற்கான மசோதாவை தாக்கல் செய்ய தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்,” என்று தெரிவித்தார்.
* 34% ஏழை குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி
பீகாரில் மொத்தம் 2.97 கோடி குடும்பங்கள் உள்ளன. இதில் மூன்றில் ஒரு குடும்பம் ஏழையாகவும் அதன் மாத வருமானம் ரூ.6000 (நாளொன்றுக்கு ரூ.200) அல்லது அதற்கு குறைவாக உள்ளது. இதே போன்ற வருமானத்தில் எஸ்சி, எஸ்டி பிரிவில் 43% குடும்பங்கள் உள்ளன. இந்த 94 லட்சம், அதாவது 34.13% குடும்பங்கள் தங்களது பொருளாதார நிலையை உயர்த்தி கொள்ள வழி செய்யும் வகையில் அரசு குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக மாநில அரசுக்கு ரூ.2.51 லட்சம் கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வீடற்றோருக்கு ரூ.1 லட்சம் பீகார் அரசு வீடற்றவர்களை அடையாளம் கண்டு அவர்கள் தங்களுக்கென வீடு கட்டிக் கொள்ள ரூ.1 லட்சம் வழங்கும் என்று முதல்வர் நிதிஷ் அறிவித்தார்.
* உயர் வகுப்பினரில் 25 சதவீதத்துக்கும் சற்று கூடுதலான குடும்பங்கள் ரூ.6000 அல்லது அதற்கு குறைவாக வருமானம் ஈட்டுகின்றன.
* 35 சதவீதத்துக்கும் அதிகமான யாதவ் பிரிவினரின் குடும்பங்களின் மாத வருமானம் ரூ.6000 ஆக உள்ளது.
* முதல்வர் நிதிஷ் குமாரின் குர்மி இனத்தவர்களில் 30 சதவீதத்தினரின் மாத வருமானம் ரூ.6000 ஆக உள்ளது.
* வேலை வாய்ப்பு, சிறந்த கல்வியை தேடி 50 லட்சம் பீகார் மக்கள் வெளிமாநிலங்களில் வசிக்கின்றனர்.