திருமலை: ஆந்திராவில் காப்பு சமூகத்தினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு கோரி அந்த இயக்கத்தின் தலைவர் முத்தரகடா பத்மநாபம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தலைமையில் 2016ம் ஆண்டு துனி அருகே பேரணி நடந்தது. அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அந்தப் பகுதி வழியாகச் சென்ற ரத்னாச்சல் எக்ஸ்பிரஸ் ரயிலை தீ வைத்து எரித்ததால் பரபரப்பானது. அப்போது ஆட்சியில் இருந்த தெலுங்கு தேச கட்சி அரசு இதனை கண்டித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டது மட்டுமல்லாமல், முத்தரகடா பத்மநாபம் உட்பட அனைத்து தலைவர்கள் மீதும் வழக்குகளைப் பதிவு செய்தது. மறுபுறம், இந்த சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்ட ரயில்வே துறை, அதன் சொந்த பிரிவுகளைப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.
இந்த நிலையில் 2019ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் ஆட்சிக்கு வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு, காப்பு சமூக தலைவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற்றது. இதற்காக விஜயவாடாவில் உள்ள ரயில்வே நீதிமன்றத்தின் 7வது பெருநகர கூடுதல் நீதிபதி, 2021ல் இந்த வழக்குகளை தள்ளுபடி செய்தார். இருப்பினும், ரயில்வே துறை பின்னர் முத்தரகடா பத்மநாபன் உட்பட சிலருக்கு சம்மன் அனுப்பியது. இப்போது மீண்டும் தெலுங்கு தேச கட்சி ஆட்சிக்கு வந்த நிலையில், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அரசு வழக்கறிஞர் நியமித்து இதுதொடர்பாக மாநில உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் முத்தரகடா பத்மநாபம் உட்பட அந்தக் கால வழக்குகளை எதிர்கொண்ட அனைவருக்கும் மீண்டும் சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள உள்ளனர்.