Tuesday, April 23, 2024
Home » மறக்கமாட்டார்கள்

மறக்கமாட்டார்கள்

by Mahaprabhu

இடஒதுக்கீடு என்பது சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அரசுப்பணிகள், அரசியல் பிரதிநிதித்துவம் போன்றவற்றுக்கு வழிவகுத்து சமூகத்தில் அவர்களை தலைநிமிரச் செய்வதாகும். தமிழ்நாட்டை பொறுத்தவரை 1928ம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் இருந்தபோதே வகுப்புவாரி உரிமை என்ற பெயரில் இடஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனாலும் தமிழ்நாட்டில் பல்வேறு சமூக மக்களுக்கான இடஒதுக்கீட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஈடில்லா தலைவர் கலைஞர் என்றால் அது மிகையல்ல. முதல்வராக இருந்த போது 1970ல் அவர் அமைத்த சட்டநாதன் ஆணைய பரிந்துரைகள்தான் இதற்கான ஆதார விதையாகும். பிற்படுத்தப்பட்டோருக்கு 25 சதவீதம் என்றிருந்த இட ஒதுக்கீட்டை 31 சதவீதம் என்றும், தாழ்த்தப்பட்டோருக்கு 16 சதவீதம் என்றிருந்த ஒதுக்கீட்டை 18 சதவீதம் என்றும் உயர்த்தி ஆணை பிறப்பித்தது அவர் தான். இதேபோல் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம், பழங்குடியினருக்கு தனியே 1 சதவீதம், சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம், அருந்ததியருக்கு 3 சதவீதம் என்ற இடஒதுக்கீடுகளும் கலைஞர் ஆட்சி காலத்தில்தான் வழங்கப்பட்டது.

இந்த வகையில் வன்னியர் சமூக மக்களுக்காக கலைஞர் கொண்டு வந்த இடஒதுக்கீட்டை தர்மபுரி தேர்தல் பிரசார கூட்டத்தில் கோடிட்டு காட்டியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். ‘‘வன்னிய சமூக மக்கள் 1987ம் ஆண்டு தனி இடஒதுக்கீடு கேட்டு கடுமையாக போராடினார்கள். அப்போதைய ஆட்சியாளர்கள் அதை கொடுக்கவில்லை. 1989ம் ஆண்டு மீண்டும் முதல்வராக கலைஞர் வந்தவுடன் 43 நாளில் வன்னியர் சமூகத்தினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து 20 சதவீத ஒதுக்கீடு வழங்கினார். வன்னியர்களின் வாழ்வில் ஒளியை ஏற்றினார். அதேபோல், இடஒதுக்கீடு போராட்டத்தின் போது உயிரிழந்த 21 குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் கருணை தொகையை வழங்கினார். அந்த குடும்பத்தினர் இப்போதும் ரூ.3 ஆயிரம் பென்சனை மாதந்தோறும் பெற்று வருகிறார்கள்,’’ என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். இது ஒரு புறமிருக்க கோனேரிக்குப்பத்தில் மருத்துவர் ராமதாஸ் நடத்திய வெள்ளிவிழா மாநாட்டில் கலைஞர் பங்கேற்றார். அந்த மாநாட்டில் ராமதாஸ் பேசும்போது, ‘‘1987ல் போராடிய கிடைக்காமல் இருந்திருந்தால், கூலி வேலைக்கு சென்றுகொண்டு ஓட்டு போடும் சமூகமாக மட்டுமே இருந்திருக்க வேண்டிவரும். கலைஞர் அதனை மாற்றினார்’’ என்று மருத்துவர் ராமதாஸ் சிலாகித்து பேசியதையும் நினைவுபடுத்தியுள்ளார்.

சமூகம் எதுவானாலும் ஒதுக்கீடு தந்து சமூக நீதியை காப்பாற்றிய இயக்கம் திமுக. 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பையும், சாதி வாரி கணக்கெடுப்பையும் ஒன்றாக நடத்த வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. அரசியல் அமைப்பு சட்டப்படி கணக்கெடுப்பு நடத்த அங்கீகாரம் வேண்டும். மாநில அரசு, சர்வே வேண்டுமானால் எடுக்கலாம். கணக்கெடுப்பை எடுக்க முடியாது. அதனால் தான், நாடு முழுவதும் இந்த சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அங்கீகாரம் அளிக்க இந்தியா கூட்டணி வாக்குறுதி தந்துள்ளது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். தேர்தல் களத்தில் அரசியல் கணக்கீடுகளுக்காக கூட்டணிகள் மாறலாம். ஆனால், சமூகநீதிக்கு வித்திட்டு சமத்துவம் தந்த இடஒதுக்கீட்டால் பயன்பெற்ற தமிழ்மக்கள் அதை என்றென்றும் மறக்க மாட்டார்கள் என்பதே நிதர்சனம்.

You may also like

Leave a Comment

2 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi