சென்னை: அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் ஆ.ஹென்றி, தமிழ்நாடு பதிவுத்துறை தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
வரும் 27ம்தேதி சுபமுகூர்த்த தினம் என்பதால், இந்நாளில் பெரும்பாலான மக்கள் சொத்து வாங்குவது சம்பந்தமான ஆவணங்களை பதிவு செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், தமிழ்நாடு முழுவதுமுள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் (பம்மல், பல்லாவரம், திருப்போரூர், படப்பை, செங்கல்பட்டு, ஆவடி, கூடுவாஞ்சேரி, வேளச்சேரி, தாம்பரம், பெரும்புதூர், நீலாங்கரை உள்ளிட்ட பல அலுவலகங்களில்) ஆவணம் பதிவு செய்ய தேவையான அளவிற்கு முன்பதிவு டோக்கன் பற்றாக்குறை நிலவுகிறது.
இதனால் பெரும்பாலானோர் ஏமாற்றமடைகின்றனர். ஆகவே, பொதுமக்களின் உணர்வுக்கும், எண்ணங்களுக்கும் பதிவுத்துறை மதிப்பளித்து வரும் 27ம்தேதி சுபமுகூர்த்த தினத்தில் ஆவண பதிவுகளை அனைத்து மக்களும் மேற்கொள்ளும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் தேவையான அளவிற்கு முன்பதிவு டோக்கன்கள் வழங்கவேண்டும் என அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இதன்மூலம் பதிவுத்துறைக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன் பொதுமக்களின் விருப்பமும் நிறைவேறும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.