சென்னை: தமிழ்நாட்டில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் 21 பல்கலைகழகங்கள் உள்ளன. இவற்றில் சென்னை பல்கலையில் ஓராண்டாகவும், கோவை பாரதியார் பல்கலையில் 2 ஆண்டுகளாகவும், ஆசிரியர் கல்வியியல் பல்கலையில் ஓராண்டாகவும், சென்னை அண்ணா, மதுரை காமராஜ் பல்கலைகழகளிலும் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுதவிர சேலம் பெரியார், திருச்சி பாரதிதாசன் பல்கலைகளில் பதவிக்காலம் முடிந்த நிலையில் துணை வேந்தர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக துணைவேந்தர்கள் நியமனத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் மோதல் போக்கு நீடிப்பதால் துணைவேந்தர் தேர்வுக்கான தேடல் குழுவை அமைப்பதில் முடிவு எட்டப்படாமல் உள்ளது. யு.ஜி.சி., புதிய விதிப்படி துணைவேந்தர் நியமனத்திற்கான தேடல் குழுவில் யு.ஜி.சி., பிரதிநிதி ஒருவர் கூடுதலாக இடம் பெற வேண்டும் என ஆளுநர் கண்டிப்பு காட்டுகிறார். ஆனால், பல்கலை சட்டப்படி யு.ஜி.சி., பிரதிநிதி தேவையில்லை. அரசால் நியமிக்கப்படும் தேடல் குழுவிற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த மோதலால் தற்போது காலியாக உள்ள பல்கலைகளில் துணைவேந்தர்கள் நியமனம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களின் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான குறைந்தபட்ச தகுதிகள் குறித்த வரைவு விதிமுறைகளை ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த ஜனவரி 6ம் தேதி வெளியிட்டார். இந்த வரைவு விதிமுறைகளில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான மூன்று நபர் தேடல் மற்றும் தேர்வுக் குழுவை நியமிக்கும் அதிகாரம் பல்கலைக்கழக வேந்தருக்கு (ஆளுநர்) அளிக்கப்பட்டிருக்கிறது. இதனைச் செயல்படுத்தாத பல்கலைக்கழங்கள் யுஜிசியின் திட்டங்களில் பங்குபெற முடியாது என்றும் பட்டப் படிப்புகளை வழங்க முடியாது என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
துணைவேந்தர் பதவிக்கான தேர்வு குறித்து அகில இந்திய அளவில் செய்தித் தாள்களில் பொது அறிவிப்புகள் மூலம் அறிவிக்க வேண்டும். தேடல் மற்றும் தேர்வுக் குழுவின் தேடல் மூலமோ, அழைப்புகள் மூலமோ விண்ணப்பங்கள் கோரப்படலாம் என்கிறது இந்த புதிய விதிமுறை. இந்தத் தேடல் குழுவின் தலைவர் வேந்தரால் நியமிக்கப்படுவார். யுஜிசி தலைவரின் சார்பில் ஒருவர், செனட், சிண்டிகேட் போன்ற பல்கலைக்கழக உயர்மட்ட குழுக்களின் சார்பில் ஒருவர் ஆகியோர் இந்த குழுவின் உறுப்பினர்களாக இருப்பார்கள். துணை வேந்தர்களுக்கான தகுதியை வரையறுக்கும்போது, தொழில்துறை, பொது நிர்வாகம், பொதுக் கொள்கை, பொதுத் துறை நிறுவனங்களைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க கல்வித் தகுதியைக் கொண்ட மூத்த அதிகாரிகளும் இதற்கு தகுதி பெறுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தப் புதிய விதிமுறைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக கண்டனம் தெரிவித்தார்.
‘துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர்களுக்கு பரந்த அதிகாரங்களை வழங்குவது, கல்விப்புலம் சாராதோரும் துணைவேந்தேர் ஆகலாம் என்பது போன்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிமுறைகள் கூட்டாட்சியியல் மற்றும் மாநில உரிமைகளுக்கு எதிரான நேரடித் தாக்குதல் ஆகும். பாஜ அரசின் இந்த எதேச்சதிகார முடிவு அதிகாரக் குவியலுக்கு வழிவகுத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைச் சிறுமைப்படுத்துவதாக உள்ளது.
மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர்களிடம்தான் கல்வி தொடர்பான அதிகாரங்கள் இருக்க வேண்டும், பாஜ அரசின் கைப்பாவையாகச் செயல்படும் ஆளுநர்கள் கைக்கு அது செல்லக்கூடாது ’ என முதல்வர் கூறியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டப்படி கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதால், தன்னிச்சையாக இந்தப் புதிய விதிமுறைகள் தொடர்பான அறிவிக்கையை யு.ஜி.சி. வெளியிட்டது அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது. இதற்கு எதிராக, சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் போராட்டத்தை தமிழ்நாடு முன்னெடுக்கும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். துணைவேந்தர் பதவிகளும் இதர மூத்த அலுவலர்களும் இல்லாதது பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தை முடக்கி, குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது கல்வியாளர்களுக்கு மட்டுமின்றி, மாணவர்களுக்கும் கவலை தரக்கூடியதாக உள்ளது. இந்த நிலை மாணவர் நலனுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதுடன், பல்கலைக்கழகங்களின் கல்வி மற்றும் ஆய்வுப் பணிகளின் தரத்திலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக முனைவர் பட்டம் பெறும் (பிஎச்டி) மாணவர்கள் தங்களது ஆய்வு அறிக்கைகள் சமர்ப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும், பணிபுரியும் கல்லூரியில் தங்களுக்கான உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனவும் பலர் புலம்பி வருகின்றனர்.
இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக பிஎச்டி மாணவி ஒருவர் கூறுகையில், ‘‘நான் கடந்த ஆண்டு என்னுடைய ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தேன். ஆனால் ஆய்வுக் குழுவின் பட்டியல் கூட இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஒரு தனியார் கல்லூரியில் தற்போது பணிபுரிந்து வருகிறேன். ஆனால் பிஎச்டி தகுதியில் இல்லாமல் எம்.காம் தகுதியின் அடிப்படையிலேயே எனக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. எனக்கு பின்னால் பணியில் சேர்ந்த பலரும் பி.எச்.டி அடிப்படையில் நெட் தேர்ச்சி பெற்று பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு பெற்று வருகின்றனர். ஆனால் கடந்த ஒரு வருடமாக வைவா கூட நடத்தப்படாததால் எனக்கான வாய்ப்புகள் அனைத்தும் பறிபோகிறது. என்னைப்போல நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு வரிசையில் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இது அனைத்திற்கும் துணைவேந்தர் இல்லாததே காரணமாக உள்ளது. யுஜிசி பொருத்தவரை புதிய அறிவிப்புகளை தினம்தோறும் அறிவித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் எங்களுக்கான தகுதிகளை நாங்கள் உயர்த்திக்கொள்வதில் பாதிப்பு ஏற்படுகிறது. எங்கள் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடும்போல் உள்ளது. அதுமட்டுமல்ல 2023ம் ஆண்டு வரை ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க ரூ.100 மட்டுமே இருந்த நிலையில் தற்போது ரூ.2500 வரை கேட்கிறார்கள். கேட்டால் பல்கலைக் கழகத்தில் நிதி பற்றாக்குறை என கூறுகின்றனர். தனியார் என்றால் கூட பரவாயில்லை. அரசாங்க நிர்வாகத்தில் இருந்துகொண்டு இப்படி கூறுகிறார்கள். இதற்கு அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.
* ஆளுநரை நீக்கும் சட்டம்
கேரள மாநிலத்திலும் இதுபோல, துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மாநில அரசால் நியமிக்கப்பட்ட 9 துணை வேந்தர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென கேரள முன்னாள் ஆளுநர் ஆரிப் முகமது கான் சொல்லும் அளவுக்கு இந்த விவகாரம் முற்றியது. இதையடுத்து, பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கும் சட்டத்தை அம்மாநில சட்டமன்றம் 2022ம் ஆண்டின் இறுதியில் நிறைவேற்றியது. வேந்தர்களை முதலமைச்சர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ள குழு தேர்வு செய்யுமென அந்தச் சட்டம் கூறியது. இதேபோன்ற சட்டங்களை, மேற்கு வங்கம், பஞ்சாப் மாநிலங்களும் இயற்றின.
2013ம் ஆண்டின் யுஜிசி விதிகளின்படி, தேடல் மற்றும் தேர்வு கமிட்டிகள் அந்தந்த பல்கலைக்கழகச் சட்டங்களின்படி உருவாக்கப்படும். பொதுவாக, தமிழக பல்கலைக்கழகங்களில் அமைக்கப்படும் தேடுதல் குழுக்களில் அரசின் பிரதிநிதி ஒருவர், வேந்தரின் பிரதிநிதி ஒருவர், செனட் – சிண்டிகேட்டின் பிரதிநிதி ஒருவர் என நியமிக்கப்படுவார்கள். இவர்கள் பெரும்பாலும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர், ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர், முன்னாள் துணைவேந்தர் ஒருவர் என இருப்பார்கள். 2018ம் ஆண்டில், யுஜிசி புதிய விதிமுறைகளை வெளியிட்டது. அந்த விதிமுறைகளில், யுஜிசியின் சார்பில் ஒருவரும் தேர்வுக் குழுவில் இடம் பெற வேண்டுமெனக் கூறியது. அந்தத் தருணத்தில்தான் தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். அவர் வேந்தருக்கான பிரதிநிதியை தானே நியமிக்க ஆரம்பித்தார். அதற்குப் பிறகு ஆளுநராக வந்த ஆர்.என். ரவியும் இதனைத் தொடர்ந்து வருகிறார்.
* ‘கடந்த 3 ஆண்டுகளாக ஒருமுறை கூட ஆலோசனை கூட்டம் நடத்தவில்லை’
சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: சென்னை பல்கலைக் கழகத்தை பொருத்தவரை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக துணைவேந்தர் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இதனால் மொத்த நிர்வாகமும் பாதிப்பில் தான் உள்ளது. பிஎச்டி மாணவர்களின் ஆய்வு அறிக்கையை சர்ப்பிப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. மாறாக ஆய்வு அறிக்கை பதிப்பீட்டாளர்களை தேர்வு செய்வதில் தான் சிக்கல் உள்ளது. துணைவேந்தர் இருந்தால் இந்த பணிகள் துரிதமாக நடைபெறும். ஆனால் அதற்கு அவருக்குப் பதிலாக செனட் குழுதான் அந்தப்பணிகளை பார்த்து வருகிறது.
செனட் குழுவை பொருத்தவரை சென்னை பல்கலையை சேர்ந்தவர் ஒருவர்தான். மற்றவர்களுக்கு இங்கு வந்து செல்லும் அளவுக்கு நேரம் கூட இல்லை. இந்த நிலமையில் தான் பல்கலைக்கழக நிர்வாகம் மோசமாக செயல்பட்டு வருகிறது. வைவா நடத்திவதிலும் தாமதம் ஆகிறது. சென்னை பல்கலைக் கழகத்தில் மட்டும் 800க்கும் அதிகமாக ஆராய்ச்சி மாணவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இதுபோக இணைப்புக் கல்லூரிகளிலும் பல மாணவர்கள் வரிசையில் உள்ளனர். சென்னை பல்கலைக் கழகத்திற்கு மட்டுமே இவ்வளவு மாணவர்கள் என்றால் இதுபோல மேலும் 5 பல்கலையில் துணைவேந்தர்கள் இல்லாமல் உள்ளனர். அப்படி பார்க்கையில் ஆயிரகணக்கான மாணவர்கள் தங்கள் எதிர்காலம் என்ன ஆக போகிறது என்ற கலக்கத்தில் உள்ளனர்.
பல்கலைக் கழக நிர்வாகமும் அவ்வளவு நன்றாக உள்ளது என்று கூற முடியாது. துறை தலைவர்கள் மற்றும் அனைத்து பேராசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கடைசியாக கொரோனா தொற்றுக்கு முன்னர் நடத்தது. அதற்கு பின்னர் 3 ஆண்டுகளாக இதுவரை ஒரு ஆலோசனை கூட்டம் கூட நடத்தபடவில்லை. துணைவேந்தர் இருந்தபோதுகூட அதற்கான முன்னெடுப்பு எடுக்கப்படவில்லை. துறை சார்ந்த விஷயங்களை கூட கேட்டு தெரிந்துகொள்ளாமல் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. தனியார் கல்லூரிகள் வாரம் ஒரு ஆலோசனை நடத்தி கல்லூரிகளை முன்னெடுத்து செல்கின்றனர். ஆனால் ஒரு பொது நிர்வாகத்தில் இருந்துகொண்டு மாணவர் நலனில் கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல்தான் இங்கு உள்ளவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.