புதுடெல்லி: சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை பாராட்டி மாநிலங்களவையில் எம்பிக்கள் நேற்று பேசினர். விவாதத்தில் பேசிய மார்க்சிஸ்ட் எம்பி சிவதாசன், ‘‘கடந்த சில ஆண்டுகளாக விண்வெளிக்கு அனுப்பும் ராக்கெட்டுகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி குறைந்து வருவதால் இந்த நிலைமை உருவாகவில்லை. அரசின் நிதி போதுமானதாக இல்லாததே இதற்கு காரணம். சந்திரயான் 3 விண்கலத்துக்கு ரூ.615 கோடி ஆகியுள்ளது. ஆனால், சிலைகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவழித்துள்ளனர்’’ என்றார்.
அப்துல் வகாப்(ஐயுஎம்எல்) பேசுகையில்,‘‘ இந்தியாவை விட , வெளிநாட்டு விஞ்ஞானிகள், 5 மடங்கு அதிக சம்பளம் பெறுகின்றனர். இந்திய விஞ்ஞானிகள் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்’’ என்றார். கபில் சிபில் பேசுகையில்,‘‘ ஆராய்ச்சிகளின் மூலம் சாதாரண மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும். குறைந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் அறிவியல் ஆராய்ச்சியில் போதிய தீர்வுகள் கிடைக்காது’’ என்றார்.