திருமலை: பல்வேறு மாநிலங்களில் இருந்து பச்சிளம் குழந்தைகளை திருடி கடத்திச்சென்று விற்பனை செய்ததாக பெண் டாக்டர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 11 பச்சிளம் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் அதிகாரிகள் எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும் குழந்தைகள் விற்பனை நிறுத்தப்படவில்லை. குழந்தை இல்லாத பெற்றோர்கள் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்குகிறார்கள். சில பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்க முடியாத காரணத்தினாலோ அல்லது பணம் இல்லாத காரணத்தினாலோ குழந்தைகளை விற்கின்றனர். சமீப காலமாக குழந்தைகளை விற்பதற்காக புரோக்கர்களும் உருவாகி லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். குழந்தை இல்லாத பெற்றோர்கள் ஆசைப்பட்டு நிறைமாதக் குழந்தைகளை விலைக்கு வாங்குகின்றனர். ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு குழந்தைகளை பரிமாற்றி பணம் சம்பாதிக்கிறார்கள். அவ்வாறு ெதலங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர் பகுதியில் உள்ள மெடிப்பள்ளியில் பச்சிளம் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அக்ஷரா ஜோதி அறக்கட்டளையினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து குழந்தைகளை கடத்தி விற்பனை செய்து வந்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
இது தொடர்பாக மெடிப்பள்ளியை சேர்ந்த ஷோபா , ஹேமலதா, ஷேக்சலீம் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து திருடி கடத்தப்பட்ட 11 பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிர்ஜாதிகுடாவில் டாக்டர் ஷோபாராணி குழந்தையை ரூ.4.5 லட்சத்துக்கு விற்றுள்ளார். இதையடுத்து டாக்டர் ஷோபாராணி, அவருக்கு உதவிய ஹேமலதா உட்பட 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். ஒவ்வொரு குழந்தைக்கும் சுமார் ரூ.1லட்சம் முதல் ரூ.5 லட்சத்திற்கு இந்தக் கும்பல் விற்றுள்ளது. விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் ராட்சகொண்டா காவல் ஆணையரகத்திற்குட்பட்ட மெடிப்பள்ளி போலீசார் 11 பச்சிளம் குழந்தைகளை கண்டுபிடித்து மீட்டனர். இதுவரை மொத்தம் இந்த கும்பல் 50 குழந்தைகளை விற்பனை செய்துள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அந்த குழந்தைகளை மீட்க முயற்சி மேற்கொள்வதாக போலீசார் தெரிவித்தனர்.