ஊட்டி: நீலகிாி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் பார்த்தீனியம் செடிகள் ஆக்கிரமிப்பு அதிகாித்துள்ளது. பார்த்தீனியம் எனப்படும் அயல்நாட்டு களை செடியானது 1950களில் கோதுமையுடன் கலந்து இந்தியாவிற்குள் ஊடுருவியது. இந்த செடியானது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவி கிடக்கின்றன. இவை வெளியிடும் மகரந்தம் உள்ளிட்டவற்றால் மனிதர்களுக்கு சுவாச கோளாறுகள், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் மற்றும் ஒவ்வாமை ஏற்படுத்துகின்றன. உடல் மீது படும்போது ஒருவிதமான அரிப்பு ஏற்படுகிறது. பார்த்தீனியம் செடியானது விதைகள் காற்றில் பரவி செழித்து வளர்ந்து வருகின்றன. இந்த செடி வளரும் இடங்களில் வேறு எந்த தாவரம், புற்கள் போன்றவை வளருவதில்லை. இதனால், வன விலங்குகள், கால்நடைகள் போன்றவற்றிற்கு உணவு தட்டுப்பாடு ஏற்படுகிறது.
இதனை உட்கொள்ளும் கால்நடைகளின் பாலில் கசப்பு தன்மை உண்டாகிறது. இந்த செடிகள் கரியமில வாயுவை வெளியிடுவதால், சுற்றுச்சூழல் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரை கிராம பகுதிகளான கடநாடு, எப்பநாடு, சின்னகுன்னூர் போன்ற கிராம பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி, சிங்காரா உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகளவில் காணப்படுகின்றன. குறிப்பாக, முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கல்லட்டி – மசினகுடி – தெப்பக்காடு சாலை, தொரப்பள்ளி சாலை உள்ளிட்ட சாலையோரங்களில் பார்த்தீனியம் அதிகளவு வளர்ந்துள்ளது. இவற்றை அவ்வப்போது வனத்துறையினர் அகற்றும்போது மீண்டும் வளர்கிறது. தற்போது, நல்ல மழை பெய்து வரும் நிலையில் பார்த்தீனியமும் விரைவாக வளர்ந்து வருகிறது.
எனவே, சிறப்பு கவனம் செலுத்தி முதுமலை பகுதிகளில் ஆக்கிரமித்துள்ள பார்த்தீனியம் செடிகளை அழித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘முதுமலை மட்டுமின்றி நீலகிரி மாவட்டம் முழுவதுமே வனப்பகுதிகள், சாலையோரங்கள் என அனைத்து பகுதிகளிலும் பார்த்தீனியம் களை செடியானது ஆக்கிரமித்து வளர்ந்துள்ளது. இவற்றை அகற்ற தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்’’ என்றனர்.