திருவள்ளூர்: திருதிருவள்ளூர் அடுத்த காக்களூர் சிட்கோ தொழில் பேட்டையில் 365 தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 7,500 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா தொற்றுக்குப் பிறகு பொருளாதாரம் மந்தமான நிலையில், மூலப் பொருள்களின் விலை உயர்வு, பணியாளர்களின் பற்றாக்குறை போன்ற பல இன்னல்களை தொழிற்சாலை உரிமையாளர்கள் சந்தித்து வருகின்றனர். மேலும், தற்போது உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினர் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். இந்த நிலையில் உயர்த்தப்படும் மின் கட்டணம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை நிரந்தரமாக முடக்கிவிடும் அபாயம் உள்ளது.
இது குறித்து பலமுறை அரசிடம் முறையிட்டும் எந்த ஒரு தீர்வும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் பலமுறை தமிழ்நாடு முதல்வரை சந்திக்க முயற்சி செய்தும் நேரில் பார்க்க முடியவில்லை. இதனால் காக்களூர் சிட்கோ தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை குறைக்கக்கோரி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பதிவு தபால் மூலம் கோரிக்கையை அனுப்பி வைத்தனர். இதற்கு தீர்வு காணாத பட்சத்தில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தொழிற்சாலை உரிமையாளர்கள் தெறிவித்தனர்.