வருசநாடு: வருசநாடு அருகே, மொட்டப்பாறை பகுதியில், மூலவைகை ஆற்றில் சேதமடைந்துள்ள தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம், வருசநாடு அருகே மொட்டப்பாறை பகுதியில், மூலவைகை ஆற்றின் குறுக்கே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணை கட்டப்பட்ட பின்னர், வருசநாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது. இதனால் விவசாயமும் செழிப்படைந்தது.
இந்நிலையில் மூல வைகை ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சிறிது சிறிதாக சேதமடைந்து தற்போது முற்றிலும் உடைந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் தண்ணீர் தேங்காமல் அப்படியே செல்லும் நிலை உள்ளது. மேலும் தடுப்பணையின் இருபுறமும் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவர்களும் சேதமடைந்துள்ளன. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கரையோரத்தில் உள்ள தோட்டத்திற்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது.
எனவே ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவாக உள்ள போதே தடுப்பணையை முழுமையாக சீரமைத்தால், வெள்ளப் பெருக்கின் போது தண்ணீர் தேங்கி நிற்பதுடன் பாதிப்புகள் தவிர்க்கப்படும் என கிராம மக்கள், விவசாயிகள் கூறுகின்றனர்.இதுகுறித்து, அந்தப் பகுதியினர் கூறுகையில், ‘‘தடுப்பணை முற்றிலும் சேதமடைந்து விட்டதால் அதில் நீர் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுப்பணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.