ரிஷிவந்தியம் : கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதி, பேரால் கிராமத்து பெரிய ஏரி வழியாக வேளானந்தல் செல்லும் தார் சாலை ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலை சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் உள்ள இச்சாலை அமைக்கப்பட்டது. அதன்பின் இச்சாலை சீரமைக்கப்படவில்லை.
இச்சாலை வழியாக பேரால் கிராம மக்கள் அவசர அவசிய அத்திவாசிய தேவைக்காக அன்றாடம் வேளானந்தல், சூளாங்குறிச்சி, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட நகரத்தில் உள்ள வங்கி மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் குறிப்பாக விவசாயிகள் பொதுமக்கள் செல்கின்றனர்.
சாலை சரியில்லாததால் பாவந்தூர் வழியாக சுற்றிக் கொண்டு செல்கின்றனர், இதனால் கால விரயமும், பணச் செலவும் ஏற்படுகிறது, வாகன ஓட்டிகளும், மாணவ, மாணவிகளும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த சாலை மண் அரிப்பு ஏற்பட்டு உடைந்தும், முள்புதர்கள் முண்டியும், கற்கள் பெயர்ந்தும் கிடைக்கிறது. இச்சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தார் சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.