சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும், பவானி நதியில் கழிவு நீர்,ஆலை கழிவுகள்,நேரடியாக கலப்பதால் சமீப காலமாக சத்தியமங்கலம் பகுதியில் ஆகாயத்தாமரை பவானி நதியில் அசுர வளர்ச்சி அடைந்து நதி முழுவதும் ஆக்கிரமித்துள்ளது.
விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த பவானி நதியை மூடியுள்ள ஆகாயத்தாமரைகளால் சலவைத் தொழிலாளர்களும்,பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கால்நடைகளும், நீர்நிலைகளில் வாழக்கூடிய உயிரினங்களும் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
எனவே நீர்வளத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், நகராட்சி நிர்வாகம் இணைந்து, ஆய்வு மேற்கொண்டு போர்க்கால அடிப்படையில் பவானி ஆற்றில் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், கழிவு நீரில் தான் ஆகாயத்தாமரை வளரும். இந்த ஆகாயத்தாமரையின் வளர்ச்சி, நீர் மாசுபாட்டை உறுதி செய்கிறது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, ஆலைக்கழிவுகளால் பவானி நதி மாசுபடுவதை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும்.
நீர்வளத்துறை, வருவாய்த்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், பொதுநல அமைப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும் என பவானி நதி கூட்டியக்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.