திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தொட்டிபாளையம் கிராமம் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கு 15 வயதில் மாற்றுத்திறனாளியான மகள் உள்ளார். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள தங்களுக்கு வீடு வழங்கக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு அளித்துள்ளார்.அந்த மனுவில் கூறியுள்ளதாவது: தனது மகள் மாற்றுத்திறனாளியாக உள்ளார். சுயமாக இயற்கை உபாதைகள் கூட செல்ல முடியாத நிலையில் உள்ளதால் பல்வேறு பகுதிகளில் வாடகைக்கு கூட வீடுகள் தர மறுக்கிறார்கள்.
நாங்கள் குடும்பத்துடன் உயிர் வாழ்வதற்கு மிகவும் சிரமப்படுகிறோம். கூலி வேலை செய்து வருகிறேன். வறுமை நிறைந்த சூழ்நிலையில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருகிறோம். 80 சதவீதம் விழுக்காடு ஊனத்தன்மை உள்ள என் மகளை நிரந்தரமாக ஒரே இடத்தில் வைத்து பராமரிக்க வீடு இல்லாத எங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தில் மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை அடிப்படையில் வீடு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.