ஈரோடு : ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தின் வருவாயை அதிகரிக்கும் வகையில், கனிமார்க்கெட் வணிக வளாகத்தில் காலியாக உள்ள கடைகளுக்கு பொது ஏலம் நடத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கனிமார்க்கெட் வணிக வளாகத்தில் 400க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இதில், 113 கடைகள் முன்னுரிமை அடிப்படையில், ஜவுளி வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.100க்கும் மேற்பட்ட கடைகள் பொது ஏலம் மூலம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், 150க்கும் மேற்பட்ட கடைகள் இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் மூடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஈரோடு மாநகராட்சியில் நிதி பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், கனிமார்க்கெட் வணிக வளாகத்தில் உள்ள கடைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வராதது வருவாய் இழப்பாகும். எனவே, மாநகராட்சி நிர்வாகம் பொது ஏலத்தை உடனடியாக நடத்தி, கனிமார்க்கெட் வணிக வளாகத்தில் உள்ள கடைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி வருவாய் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: கனிமார்க்கெட் வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு, 30 மாத வைப்புத் தொகை மற்றும் 6 மாத வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொது ஏலம் நடத்தப்பட்டது.
ஆனால் வைப்புத் தொகை அதிகம் என்பதால், வியாபாரிகள் யாரும் கடைகளை எடுக்க முன் வரவில்லை.மேலும் வைப்புத் தொகை என்பதை குறைக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன் அடிப்படையில், வைப்புத்தொகை 30 மாதம் என்பதை 12 மாதமாக குறைத்தும், 6 மாத வாடகை என்பதை ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டு,நாளை (இன்று) நடக்கிற மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் வைக்கப்பட உள்ளது.
இந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் கிடைத்தவுடன்,வரும் 4 அல்லது 5ம் தேதி, கனிமார்க்கெட் வணிக வளாகத்திற்கான பொது ஏலத்தை மீண்டும் நடத்தி கடைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.