76வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னையில் வரும் 26ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு டிரோன் பறக்க தடை
சென்னை: சென்னை பெருநகர காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மெரினா கடற்கரையில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலை அருகில் 76வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. மேலும் இவ்விழாவில் தமிழக ஆளுநர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
2023ம் ஆண்டு பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா பிரிவு 163ன் கீழ் ட்ரோன்கள் ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோலைட் ஏர்கிராப்ட், பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேன்ட் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றை சென்னை பெருநகர காவல் எல்லையில் பறக்க விட வரும் 26ம் தேதி முதல் வரும் பிப்ரவரி 23ம் தேதி வரை தடை செய்யப்பட்ட ஆணை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
எனவே, பாதுகாப்பு அலுவலின் பொருட்டு சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களிலும் (அரசு விழாக்கள் தவிர) மெரினா கடற்கரையில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், ராஜ்பவன் முதல் மெரினா கடற்கரை வரை மற்றும் முதல்வர் இல்லத்தில் இருந்து மெரினா கடற்கரை வரையில் செல்லும் வழித்தடங்கள் ‘சிவப்பு’ மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அந்த பகுதிகளில் ரிமோட் ஏர் கிராப்ட் சிஸ்டம் மற்றும் ட்ரோன்கள் மற்றும் எந்த விதமான பொருட்களும் பறக்கவிட தடை விதிக்கப்படுகிறது.


