வாஷிங்டன்: டொனால்டு டிரம்பின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துக் காணப்பட்டன என கமலா ஹாரிஸ்துணை அதிபர் வேட்பாளர் டிம் வால்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளருடன் சேர்ந்து முதல் முறையாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். ஃபிலடெல்ஃபியா பகுதியில் நடைபெற்ற பொது கூட்டத்தில் துணை அதிபர் வேட்பாளரான மினசோட்டா ஆளுநர் டிம் வால்ஸை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து பொதுமக்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் உரையாற்றிய டிம் வால்ஸ் டிரம்பை கடுமையாக விமர்சித்தார்.
அப்போது பேசிய அவர், டொனால்டு டிரம்பின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துக் காணப்பட்டதாகவும்.டிரம்ப்பே அதிக குற்றங்களில் ஈடுபட்டதாகவும் கூறிய வால்ஸ் அவர் செய்த குற்றங்களின் எண்ணிக்கையை அவரே அறிந்திருக்கமாட்டார் என்றும் விமர்சித்தார். குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் வான்ஸுடன் விவாதம் நடத்த தயாராக இருப்பதாக அறிவித்துள்ள டிம் வால்ஸ். முதலில் படுக்கையில் தூங்கிக்கொண்டிருக்கும் வான்ஸ் அதிலிருந்து எழுந்து வெளியே வரவேண்டும் என விமர்சித்தார். பிரதான கட்சிகளான ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி சார்பில் அதிபர் மற்றும் துணை அதிபர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.