புதுடெல்லி: மைனர் பெண்ணுக்கு விருப்பம் இல்லாமல், அவரை பின்தொடர்ந்து மீண்டும் மீண்டும் காதலை வெளிப்படுத்த முயற்சி செய்தாலே போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் குற்றம் தான் என்று மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
மகாரஷ்டிரா மாநிலம் அமராவதியை சேர்ந்த மிதுராம் துர்வே என்ற இளைஞர், அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை காதலிப்பதாக அவரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த சிறுமி அதனை நிராகரித்த பின்னரும், அந்த இளைஞர் தொடர்சியாக பின் தொடர்ந்து கொண்டே வலுக்கட்டாயமாக காதலை தெரிவித்து வந்துள்ளார். மேலும் மிதுராம் துர்வேயின் தொந்தரவு தாங்க முடியாமல் அவரை கன்னத்தில் அடித்தது மட்டுமில்லாமல், சம்பவம் குறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்து இருந்தார். இதையடுத்து இந்த விவகாரத்தில் இளைஞர் மிதுராம் துர்வேயின் செயல்பாடுகளை அடிப்படையாக கொண்டு அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சீண்டல் வழக்கை போலீசார் பதிவு செய்தனர்.
மேற்கண்ட வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிமன்ற நீதிபதி கோவிந்த சேனாப், ‘இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட மிதுராம் துர்வேயின் செயல்பாடுகள் என்பது போக்சோ சட்டத்தின் பிரிவு 11ன் உட்பிரிவு 6ன் கீழ் பாலியல் சீண்டல் தான். அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. ஏனென்றால் தனக்கு காதலிக்க விருப்பம் இல்லை என்று சம்பந்தப்பட்ட சிறுமி திட்டவட்டமாக தெரிவித்த பின்னரும், அவரை பின் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். இது விசாரணையில் உறுதியாகியுள்ளது. இதில் சாட்சியங்கள் என்பது புதியதாக ஒன்றும் தேவை கிடையாது.
ஏனெனில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்கு மூலம் மற்றும் அந்த இளைஞருக்கு எதிராக கொடுக்கப்பட்ட சாட்சியங்களே நீதிமன்றத்திற்கு போதுமான ஒன்றாக உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் மிதுராம் துர்வே என்ற இளைஞருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சீண்டல் வழக்கு பதிந்தது சட்ட விதிகளின் அடிப்படையில் சரியான ஒன்றாகும். அதற்கு எந்தவித தடையும் விதிக்க முடியாது’ என்று தெரிவித்த நீதிபதி, இளைஞர் மிதுராம் துர்வே தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து இளைஞர் மிதுராம் துர்வே சிறையில் அடைக்கப்பட்டார்.