திருத்தணி: திருத்தணியில் 2வது ரயில்வே கேட் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், அடுத்த மாதம் 9ம் தேதி வரை வாகனங்கள் சென்று வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. 3வது கேட்டை பயன்படுத்தி பயணிகள், வாகன ஓட்டிகள் சென்று வர வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பஜார் மார்க்கெட் பகுதியில் உள்ள 2வது ரயில்வே கேட் வழியாக தினமும் பள்ளி மாணவர்கள், மார்க்கெட், பேருந்து நிலையம், அரசு அலுவலகங்கள் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் தினந்தோறும் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் 2வது கேட் அடிக்கடி பழுதாகி விடுவதால், வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையில் அவதிப்பட்டு வந்தனர். இதனையடுத்து பழைய ரயில்வே கேட் பராமரிப்பு பணிகளுக்காக நேற்று முன்தினம் முதல் அடுத்த மாதம் 9ம் தேதி வரை ரயில்வே கேட் மூடப்பட்டு போக்குவரத்து சேவை தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மேட்டு தெருவில் உள்ள 3வது ரயில்வே கேட்டை பயன்படுத்திக் கொள்ள ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.