கொள்ளிடம், நவ. 4: கொள்ளிடம் அருகே மாங்கனாம்பட்டு கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சாலை மேம்படுத்தப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாங்கனாம்பட்டு கிராமத்தில் தெரு சாலை உள்ளது. சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு இருந்து வரும் இந்த சாலை ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாகவும், மிகவும் கரடு முரடாகவும் இருந்து வந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளும் அங்குள்ள பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர்.
சாலையை மேம்படுத்த கோரி கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. கோரிக்கை ஏற்கப்பட்டு, கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தார் சாலை மேம்படுத்தும் பணி நேற்று முடிவுற்றது. இதே போல் கொள்ளிடம் அருகே சாமியும் கிராமத்தில் உள்ள 500 மீட்டர் தொலைவுள்ள நாடார் தெரு சாலையும் 10 ஆண்டுகளுக்கு பிறகு கிராம மக்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு தார் சாலையாக மேம்படுத்தப்பட்டது. 10 வருடங்களுக்குப் பிறகு மாங்கனாம்பட்டு தெரு சாலை மற்றும் சாமியம் நாடார் தெரு சாலை ஆகியவை மேம்படுத்தப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.