புதுடெல்லி: பீக் அவர்சில் அடிப்படை கட்டணத்தை விட 2 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்க ஓலா, உபர் மற்றும் ராபிடோ போன்ற வாடகை கார், ஆட்டோ நிறுவனங்களுக்கு ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், திருத்தப்பட்ட மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல் 2025ஐ நேற்று வெளியிட்டது. அதில், வாடகை கார் சேவை வழங்கும் நிறுவனங்கள் பீக் அவர்சில் அடிப்படை கட்டணத்தை விட 2 மடங்கு அதிகமாக வசூலிக்க அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு முன்பு இது 1.5 மடங்காக இருந்தது. அதே சமயம், பீக் அவர்ஸ் அல்லாத சாதாரண சமயங்களில் அடிப்படை கட்டணத்தில் குறைந்தபட்சம் 50 சதவீதம் கட்டணமாக இருக்க வேண்டும் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை 3 மாதத்தில் ஏற்றுக் கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடிப்படை கட்டணம் என்பது வாகன வகைகளுக்கு ஏற்ப மாநில அரசுகள் நிர்ணயித்துள்ள கட்டணம். புதிய வழிகாட்டுதலின்படி, ஒரு பயணிக்கான அடிப்படை கட்டணம் பயணத்தின் முதல் 3 கிமீக்கு வசூலிக்கப்படும். இது பயணியின்றி பயணித்த தூரம், பயணியை அழைத்துச் செல்ல பயணித்த தூரம் மற்றும் அதற்கான எரிபொருள் செலவு ஆகியவற்றை ஈடு செய்யும்.
மேலும், பயணத்தை ஏற்றுக் கொண்ட பிறகு சரியான காரணமின்றி ஓட்டுநர் ரத்து செய்தாலோ அல்லது பயணி ரத்து செய்தாலோ அவர்களுக்கு மொத்த கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதம் ரூ.100க்கு மிகாமல் இருக்க வேண்டும் என வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பீக் அவர்சில் 2 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்பட்டதன் மூலம் வாடகை கார்களின் கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.