ஊட்டி : கோடை சீசன் போது சுற்றுலா பயணிகளால் சேதமடைந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா புல் மைதானங்கள் சீரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை சீசனான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அதுவும், மலர் கண்காட்சி நடக்கும் நாட்களில் சுமார் 2 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றர்.
சுற்றுலா பயணிகளை கவருவதற்காக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள அனைத்து புல் மைதானங்களும் பராமரிக்கப்பட்டு, பச்சை பசேல் என காட்சியளிக்கும். இதில், சுற்றுலா பயணிகள் அமர்ந்தும், விளையாடியும் மகிழ்வது வழக்கம்.
இம்முைறயும் தாவரவியல் பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானம், சிறிய புல் மைதானம் மற்றும் பெரணி இல்லம் புல் மைதானங்கள் அனைத்தும் பராமரிக்கப்பட்டு பச்சை பசேல் என பச்சை கம்பளம் விரித்தது போல காட்சியளித்தது.
ஆனால், கடந்த ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்களில் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து சென்ற நிலையில், பூங்காவில் உள்ள அனைத்து புல் மைதானங்களும் சேதமடைந்தன. பெரிய புல் மைதானத்தில் மேடை அமைக்கப்பட்டிருந்த இடம், மரங்கள் உள்ள இடம், சிறிய புல் மைதானத்தில் அரங்குகள் அமைக்கப்பட்ட இடம், குளத்தை சுற்றிலுயுள்ள இடங்கள் சேதமடைந்து சேறும் சகதியுமாக மாறின.
அதேபோல், பெரணி இல்ல புல் மைதானத்தில் மலர் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்த இடம் மற்றும் மாடங்களுக்கு செல்லும் பாதைகளின் அருகேயுள்ள புல் மைதானமும் அதிகளவு சேதமடைந்தது. இந்நிலையில், இரண்டாம் சீசன் துவங்க இரு மாதங்களே உள்ள நிலையில், தற்போது பூங்காவை தயார் செய்யும் பணியில் தோட்டக்கலைத்துறை மும்முரம் காட்டி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தாவரவியல் பூங்காவில் உள்ள சிறிய புல் மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட புல் மைதானங்களில் சேதமடைந்த புற்கள் அகற்றப்பட்டு புதிய புற்கள் பதிக்கும் பணிகளை ஊழியர்கள் துவக்கியுள்ளனர். இரண்டாம் சீசனுக்குள் இந்த புல் மைதானங்கள் சீரமைக்கப்பட்டு, முறையாக பராமரிக்கப்பட்டு பச்சை பசேல் என மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.