ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள்கோயில் உள்ளது. இக்கோயில் கோபுரம் தமிழ்நாடு அரசின் முத்திரை சின்னமாக உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக ஆண்டாள் கோயில் கோபுரத்தில் செடி, கொடிகள் வளர்ந்திருந்தன. செடிகள் வளர்ந்தால் கோபுரத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் செடி, கொடிகளை உடனடியாக அகற்ற முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, தீயணைப்பு துறையினரின் உதவியுடன் கோபுரத்தில் வளர்ந்திருந்த செடி, கொடிகள் அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து தீயணைப்பு துறையினர் கூறுகையில், “கோபுரத்தின் நான்குபுறங்களிலும் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஒரு சில தினங்களில் இந்தப் பணி நிறைவடையும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.