வேலூர்: வேலூர் காகிதப்பட்டறையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், வணிக வளாக கட்டிடங்களை 2வது நாளாக இன்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் அகற்றினர். வேலூர்-ஆற்காடு சாலை காகிதப்பட்டறை தொடங்கி சத்துவாச்சாரி வரை மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையோரப்பகுதிகளை ஆக்கிரமித்து வீடுகள், வணிக வளாகங்கள் கட்டியுள்ளனர். இந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற பலமுறை அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும் யாரும் அகற்றவில்லை. இந்நிலையில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவின் பேரில் நேற்று மாநில நெடுஞ்சாலைத்துறை மண்டல உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் தலைமையில் வருவாய்த்துறை, மின்வாரிய அதிகாரிகள், காவல்துறையினர் காகிதப்பட்டறையில் குவிந்தனர்.
32 ஆக்கிரமிப்பு கட்டிடங்களில் உள்ளவர்களை வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து கட்டிடங்கள் இடிக்கும் பணியை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் தொடங்கினர். இதை பார்த்து மற்றவர்கள் தங்கள் கட்டிடங்களில் உள்ள பொருட்களை வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். வீடுகளில் இருந்தவர்கள் தங்கள் வீட்டை காலி செய்து விட்டு வேனில் தங்கள் பொருட்களை ஏற்றிச் சென்றனர். தொடர்ந்து கூடுதலாக ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு 32 கட்டிடங்களை இடிக்கும் பணி தீவிரமாக நடந்தது. இதற்கிடையில் 2வது நாளாக இன்று காலையும் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றும் பணி தொடங்கியது.
நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இச்சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.