செங்கல்பட்டு: அதிமுக ஆட்சியில் வழங்க இருந்த கிரைண்டர் அகற்றப்பட்டன . தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் மக்களுக்கு விலையில்லை மிக்சி – கிரைண்டர் வழங்கப்பட்டது. இந்த இலவச பொருட்களை தமிழகத்தில் பல இடங்களில் கடத்துவதாகவும், பதுக்கி வைத்திருந்ததாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தது. இந்த நிலையில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே பாசி தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஏராளமான கிரைண்டர்கள் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் 2014 – 2015 அதிமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய இலவச பொருட்களை வழங்காமல் வீணாக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எட்டு ஆண்டுகளாக செங்கல்பட்டில் அங்கன்வாடி மையத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட கிரைண்டர்கள் பூச்சிகள் அரித்தும், துரு பிடித்தும் வீணாக்கப்பட்டுள்ளது. மக்கள் வரி பணம் அதிமுக ஆட்சியில் வீணாக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே அப்போதைய அதிகாரிகள் யார், மக்களுக்கு வழங்காமல் வீணாக்கப்பட்டதற்கு யார் காரணம் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் அதிமுக ஆட்சி காலத்தில் வீணாக்கப்பட்ட கிரைண்டர்களை பகலில் எடுத்து செல்லாமல் இரவில் வருவாய்துறை அதிகாரிகள் தலைமையில் 10 பேர் இரவோடு, இரவாக எங்கு கடத்தி செல்கின்றனர் என கேள்வி எழுந்துள்ளது. மக்களுக்கு வழங்க வேண்டிய இலவச பொருட்கள் முறையாக வழங்கப்படாமல் வீணாக்கப்பட்டதை மறைக்கவே இரவில் அங்கன்வாடி மையத்தில் இருந்து எடுத்து செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.