செங்கல்பட்டு: தினகரனில் செய்தி வெளியானதை அடுத்து, அரசு மருத்துவமனையில் தேக்கமடைந்த சடலங்கள் அகற்றப்பட்டன. இதனை ஒரு தனியார் தொண்டு நிறுவனம் செய்திருந்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மிக முக்கிய மருத்துவமனையாக திகழ்ந்து வருவது செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. காஞ்சிபுரம், உத்திரமேரூர், வந்தவாசி, செய்யாறு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம், திருப்போரூர், திருக்கழுகுன்றம், கல்பாக்கம், மாமல்லபுரம் என சுற்றியுள்ள பல ஊர்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்வது வழக்கம்.
தினந்தோறும், சுமார் 5 ஆயிரத்திக்கும் அதிகமான நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். அந்த அளவிற்கு மாவட்ட தலைநகரமாக செங்கல்பட்டில் இந்த மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. அதேபோல், செங்கல்பட்டு சுற்றியுள்ள பகுதிகளில் தற்கொலை, கொலை, விபத்துகளில் உயிரிழந்தவர்களின் உடல்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தான் பிரேத பரிசோதனை செய்து கொடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த சூழலில் செங்கல்பட்டு மற்றும் சுற்றியுள்ள பல ஊர்களில் இருந்து வந்த அடையாளம் தெரியாத சடலங்கள் மற்றும் அனாதை சடலங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட சடலங்கள் பிணவறையில் தேக்கமடைந்துள்ளதாக கடந்த ஜூலை 3ம் தேதி தினகரன் நாளிதழிலில் படத்துடன் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் உத்தரவின்படி, மருத்துவமனையில் தேக்கமடைந்த சடலங்களை தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று, காவல் துறை முன்னிலையில், அடக்கம் செய்தது. இன்னும் சில தினங்களில் மீதமுள்ள அனைத்து சடலங்களும் அடக்கம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.