தீபாவளிக்கு மூன்று வாரங்களுக்கு முன்பே என்னென்ன துணிமணிகள் வாங்க வேண்டும், என்னென்ன பட்சணங்கள் செய்ய வேண்டும் என்று திட்டமிட ஆரம்பித்து விடுவார்கள். வீட்டில் பாட்டி, அம்மா, அத்தை என்று எல்லோரும் கூடி பேசி பட்சணங்கள் தயார் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். கடையில் வாங்கும் பழக்கம் கிடையாது. லட்டு உருட்ட ஆரம்பித்து, மைசூர்பாகு, ரவா லட்டு, அதிரசம் ஆகிய இனிப்பு வகைகளும், தேன்குழல், தட்டை, முறுக்கு, மிக்சர் ஆகிய கார வகைகளும் தயாராகும்.
தீபாவளிக்கு பத்து நாட்களுக்கு முன்பே பட்டாசுகள் வாங்கிடுவார்கள். குழந்தைகளுக்கு மத்தாப்பூ, கம்பி மத்தாப்பூ, பூவாணம், பாம்பு கேப்பு போன்ற பட்டாசுகளும். பெரியவர்களுக்கு வெடி வகைகளும் அதில் இருக்கும். அந்த பட்டாசுகளை வீட்டில் அம்மா எல்லோருக்கும் பங்கு போட்டு தனித்தனியாக எடுத்து வைப்பார். அதில் கார்த்திகை தீபம் அன்று வெடிக்கவும் தனியாக ஒதுக்கி வைப்பார். நாட்டு மருந்துக் கடையில் தீபாவளி லேகியத்திற்கு மருந்து சாமான்கள் வாங்கி, பொடித்து கிளறும் போது, வீடே நெய் மணம் கமழும்.
தீபாவளிக்கு முதல்நாள், வாங்கிய புது துணிமணிக்கு மஞ்சள்-குங்குமம் தடவி, கோலம் போட்ட பலகையில் அடுக்கிவைக்கப்படும். நல்லெண்ணெயில் மிளகு, வெற்றிலை கிள்ளிப்போட்டு காய்ச்சி வைக்கப்படும். விடியற்காலை மூன்று மணிக்கு வாசலில் படிக்கோலமிட்டு, வீடே கல்யாண களை கட்டும். அதன் பிறகு ஒரு பலகையில் கோலமிட்டு அதில் ஒவ்வொருவராக உட்காரவைத்து கெளரிகல்யாண வைபோகமே என்று பாட்டுப் பாடியே எண்ணெய் தேய்த்து விடுவார்கள்.
அன்று தண்ணீரில் கங்கை வாசம் செய்வதாக நம்பிக்கை. அதனால் அன்று முதல் இருந்தே கங்கா ஸ்நானம் ஆனதா என்று கேட்பது வழக்கமாக இருந்து வருகிறது. குளித்து முடித்ததும் சிறிதளவு இனிப்பு கொடுத்து பின் லேகியம் சாப்பிட கொடுப்பார்கள். பிறகு புது ஆடைகள் அணிந்து விடியும் வரை பட்டாசு வெடித்து மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைப்போம். இதில் யார் வீட்டு வாசலில் பட்டாசு குப்பை அதிகமாயிருக்கு என்ற போட்டி இருக்கும்.
அக்கம் பக்கத்தினருக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களை கூறி பலகாரங்களை பகிர்ந்து கொள்வோம். பெரியவர்களிடம் ஆசி பெறுவோம். அப்படியே ஒரே கொண்டாட்டமும், கும்மாளமுமாய் பொழுது கழியும். அந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணையே கிடையாது. ஆனால் இன்று நாம் கொண்டாடும் தீபாவளியில் ஆடம்பரம் இருக்கிறது. ஆனந்தம் இல்லை. எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் பலரிடத்தில் மறந்துவிட்டது. பாரம்பரிய பழக்கவழக்கங்கள் பலருக்கு தெரிவதே இல்லை.
தீபாவளிக்கு கடைகடையாய் அலைந்து உடைகள், தின்பண்டங்கள் வாங்குவதும் தீபாவளிக்கு வெளிவரும் திரைப்படங்களுக்குச் செல்வதும், நாள் முழுவதும் தொலைக்காட்சி பெட்டி முன் நேரத்தை செலவிடுவதும் நாகரிகம் என்ற பெயரில் பண்டிகையின் முக்கியத்தை மறந்துவிட்டோம். இன்று நாம் ஆடம்பரமாக கொண்டாடும் பண்டிகைகளில் அர்த்தமே இல்லாமல் இருக்கிறது. இனி வரும் காலத்தில் இந்த பண்டிகையை கொண்டாடும் பழக்கம் என்பது இருக்குமா என்பது கூட சந்தேகமாக உள்ளது.
காலம் மாறினாலும் நம் பாரம்பரியம் மற்றும் பழக்க வழக்கங்களை மாறாமல் கடைபிடிக்க வேண்டும் என்பதை வரும் தலை முறையினருக்கு சொல்லி புரியவைப்பது நம்முடைய கடமை.
தொகுப்பு: சுதா பாலசந்திரன், சென்னை.