சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இளம் பெண் ஒருவர் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், எனது பெற்றோர், எனக்கு மறுமணம் செய்ய முடிவு செய்தனர். வரன் பார்த்து வந்தனர். அப்போது புதுச்சேரி மாநிலம் முத்தையால்பேட்டை சோலை நகரை சேர்ந்த முகமது ஷாபான்(எ)ரஹமதுல்லா(36) என்பவர் வாட்ஸ் அப் மூலம் அறிமுகமானார். அப்பாது தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறினார். மேலும், எங்கள் குடும்பத்தில் யாரோ செய்வீனை செய்து இருப்பதாக கூறி சிறுக சிறுக 415 சவரன் நகைகளை பெற்று கொண்டார். அதன் பிறகு அவர் தன்னிடம் பேசாமல் மறுத்து வந்தார்.
மேலும், தன்னிடம் வாங்கிய 415 சவரன் நகைகளையும் திரும்ப தர மறுத்து வருகிறார். எனவே மோசடி நபரிடம் இருந்து நகைகளை மீட்டு தர வேண்டும் என்று புகார் அளித்திருந்தார்.அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரிக்கு உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றபிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த முகமது ஷாபான்(எ)ரஹமதுல்லா(36) இளம் பெண் குடும்பத்தினரிடம் அதிகளவில் சொத்துக்கள் மற்றும் நகைகள் இருப்பதை அறிந்து. திட்டமிட்டு இளம் பெண்ணை மறுமணம் செய்வதாக கூறி, மாந்திரீகம் செய்து நகைகளை பெற்று மோசடி செய்தது உறுதியானது.
மேலும், இதுபோல் மறுமணத்திற்காக வரன் தேடும் இளம் பெண்களை குறிவைத்து இவர் பல பெண்களிடம் ஏமாற்றி தங்க நகைகள் மற்றும் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் புதுச்சேரி மாநிலத்திற்கு சென்று மோசடி நபர் முகமது ஷாபானை கைது செய்தனர். அவனிடம் இருந்து லேப்டாப், 3 செல்போனகள், ஒரு கார் பறிமுதுல் செய்யப்பட்டது. பின்னர் முகமது ஷாபானை போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர் பல்வேறு பெண்களை ஏமாற்றி உள்ளதால் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.