மதுரை: மதுரையில் மத நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் மதகலவரத்தை தூண்டும் முருக பக்தர் மாநாட்டை கண்டித்து நேற்று மனித சங்கிலி நடந்தது. மதுரை ராஜா முத்தையா மன்றம் முன்புறம் துவங்கி தமிழ் சங்கம் வரையிலும் நடந்த மனிதச்சங்கிலியின் போது கைகளில் பேனர்களுடன், ‘அரசியலில் மதத்தை கலக்காதே’ உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியபடி ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதில், திக, விசிக, தமிழ்புலிகள், ஆதி தமிழர் பேரவை, மக்கள் அதிகாரம், மமக, எஸ்டிபிஐ உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கட்சிகள் மற்றும் அமைப்பினர் பங்கேற்றனர். விசிக தலைவர் திருமாவளவன், சினிமா இயக்குநர் அமீர் உள்ளிட்ட பலர் பேசினர். இதில், நல்லிணக்க மரபை பாதுகாக்க வலியுறுத்தி பிரகடனம் வெளியிட்டு திருமாவளவன் எம்.பி. பேசியதாவது: பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மத வெறுப்பை மக்களிடம் விதைத்து வருகின்றனர். தற்போது திருப்பரங்குன்றத்தை கையில் எடுத்துள்ளனர்.
திருப்பரங்குன்றத்தில் இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் சகோதரத்துவத்துடன் உள்ளனர். ஆனால் அயோத்தியாக மாற்றுவோம் என்று எச்.ராஜா வெளிப்படையாக பேசுகிறார். எச்சரிக்கிறோம். வடமாநிலங்களில் கடவுள் ராமர் பெயரில் கலவரங்களை ஏற்படுத்தி மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடியதுபோல், பாஜ மற்றும் சங் பரிவார் அமைப்புகள் தமிழகத்தில் கடவுள் முருகன் பெயரில் கலவரங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். தமிழகம் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் மண். எல்லா கட்சியிலும் முருகனை வழிபடுவோர் உள்ளனர். இங்கு மதங்களின் பெயரால் கடவுளின் பெயரால் மக்களை பிளவுபடுத்த முடியாது.
இதன்மூலம் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அரசியல் ஆதாயம் தேட திட்டமிடுகின்றனர். அந்த தொலைநோக்கு திட்டத்தின் அடிப்படையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துகின்றனர். பாஜவின் சூழ்ச்சியில் முருக பக்தர்கள் ஏமாந்து விடக்கூடாது. ஜாதி அடிப்படையில் வேறுபாடுகள் முரண்பாடுகள் இருக்கலாம். மதத்தின் பெயரால் தமிழர்களை பிளவுபடுத்தும் முயற்சியை கைவிட வேண்டும். இல்லையேல் அவர்களது வால் ஒட்ட நறுக்கப்பட வேண்டும். உங்களின் சூழ்ச்சியை தமிழக மக்கள் புரிந்து வைத்துள்ளனர். மதத்தின் பெயரால் தமிழக மக்களை பிளவுபடுத்த முடியாது. இவ்வாறு பேசினார்.