வாஷிங்டன்: இந்தியாவில் மத சுதந்திரம் மோசமடைந்துள்ளதா என்பது குறித்து சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் விசாரணை நடத்த உள்ளது. சர்வதேச நாடுகளின் மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வௌியுறவுத்துறை கடந்த மே மாதம் ஒரு அறிக்கை வௌியிட்டது. அதில் இந்தியாவில் மத சுதந்திரம் மோசமடைந்து வருவதாகவும், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதற்கு இந்தியா கடும் கண்டனங்களை தெரிவித்தது. இந்நிலையில் இந்தியாவில் மத சுதந்திரம் தொடர்பாக சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம்(யுஎஸ்சிஐஆர்எஃப்) விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த ஆணையம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் இரு நாடுகளின் நெருங்கிய உறவுகளை பிரதிபலிக்கிறது. இருப்பினும் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அரசாங்கம் மத சிறுபான்மையினரை குறி வைத்து பாரபட்சமான சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தி உள்ளது. மதமாற்ற எதிர்ப்பு சட்டம், பசுவதை சட்டங்கள், மதத்தின் அடிப்படையில் குடியுரிமை விருப்பங்களை அளிக்கும் சட்டம், சிவில் சமூக அமைப்புகளுக்கு வௌிநாட்டு நிதியுதவி மீதான கட்டுப்பாடுகள் என்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதுகுறித்து யுஎஸ்சிஐஆர்எஃப் அடுத்த வாரத்தில் விசாரணை நடத்த உள்ளது.
அமெரிக்க காங்கிரஸ் சட்டநூலகத்தின் வௌிநாட்டு சட்ட வல்லுநர் தாரிக் அகமத், மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் வாஷிங்டன் இயக்குநர் சாரா யாகர், சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் பெர்னான்ட் டி வரேன்ஸ், மனித உரிமைகளுக்கான இந்துக்கள் அமைப்பின் நிர்வாக இயக்குநர் சுனிதா விஸ்வநாத் மற்றும் ஜார்ஜ் டவுன் பல்கலைக் கழகத்தின் இந்திய அரசியல் பேராசிரியர்கள் இர்ஃபான் நூரூதின், ஹமத் பின் கலீஃபா அல்தானி ஆகியோர் ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க அழைக்கப்பட்டுள்ளனர்” இவ்வாறு தெரிவித்துள்ளது.