புதுடெல்லி: மதம், பொது, விளையாட்டு, பொழுதுபோக்கு நிகழ்வுகளில் கடந்த 22 ஆண்டுகளில் நடந்த 21 கூட்ட நெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட 1,500 பேர் பலியான நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குதல், மாஜிஸ்திரேட் விசாரணை, பாதுகாப்பு வழிகாட்டுதல் மட்டுமே உள்ளதால் அப்பாவிகளின் உயிர் மீதான சட்டத்தின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகி உள்ளது.
நாடு முழுவதும் கூட்ட நெரிசலில் சிக்கி அப்பாவி மக்கள் பலியாகும் சம்பவங்களில் தண்டனைகள் குறித்து ஆராயும்போது, நீதிமன்றங்கள் பெரும்பாலும் நிர்வாகக் குறைபாடுகளை மையமாகக் கொண்டு செயல்படுவதால், தனிநபர்களுக்கு எதிராக கடுமையான குற்றவியல் தண்டனைகள் விதிக்கப்படுவது குறைவு. இந்த வழக்குகளில், இழப்பீடு வழங்குதல், மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடுவது, விசாரணைகள் மூலம் பொறுப்பை நிர்ணயித்தல் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மேம்படுத்துதல் ஆகியவை முக்கிய நடவடிக்கைகளாக உள்ளன.
உதாரணமாக, 2024ல் உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸில் நடந்த சத்சங் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்தபோது, விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. ஆனால் தனிப்பட்ட நபர்களுக்கு தண்டனைகள் குறித்து தகவல்கள் இல்லை. எதிர்காலத்தில், இத்தகைய சம்பவங்களைத் தடுக்க, கூட்ட நிர்வாகத்திற்கு கடுமையான விதிமுறைகள், முன்கூட்டியே பாதுகாப்பு திட்டமிடல், உள்ளூர் நிர்வாகங்களுக்கு குறிப்பிட்ட பொறுப்புகளை விதிக்கும் சட்டங்கள் தேவைப்படுகின்றன. தற்போது, இந்தியாவில் கூட்ட நெரிசல் சம்பவங்களுக்கு எதிராக தனிநபர்களுக்கு குற்றவியல் தண்டனைகள் விதிக்கப்படுவது அரிதாகவே உள்ளது. இந்த விஷயத்தில் கடுமையான சட்டங்கள் இல்லாததால் அவ்வப் போது அப்பாவி மக்கள் பலியாவது வாடிக்கையாகிவிட்டது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றிக் கொண்டாட்டம், நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பெரும் சோகமாக மாறியது. பெங்களூரு அணியின் வெற்றி அணிவகுப்புக்கு முன்பு, மைதானத்துக்கு வெளியே மக்கள் திரளாகக் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் குறைந்தபட்சம் 50 பேர் காயமடைந்தனர். இந்த ஆண்டு (2025), கோயில்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மகாகும்பமேளா போன்ற இடங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்களில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பெரும்பாலும் கூட்ட நெரிசல் சம்பவங்கள் மத நிகழ்வுகள், பொது நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளின் போது நிகழ்கின்றன. கடந்த 2003 முதல் 2025 வரை கிட்டத்தட்ட 22 ஆண்டுகளில் நாடு முழுவதும் 21 முக்கிய கூட்ட நெரிசல் சம்பவங்களில் 1,436 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:
* இந்தாண்டு ஜனவரி 29 அன்று, உத்தரபிரதேசத்தில் நடந்த மகா கும்பமேளாவின் போது, பிரயாக்ராஜில் உள்ள சங்கமப் பகுதியில் அமாவாசை அன்று புனித நீராடலுக்கு இடம் பிடிக்க முயன்ற லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால், அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்தனர்; 60 பேர் காயமடைந்தனர். இந்தாண்டு பிப்ரவரி 15 அன்று, டெல்லி ரயில் நிலையத்தின் 14 மற்றும் 15வது பிளாட்ஃபார்ம்களில் மகாகும்பமேளாவில் பங்கேற்கச் சென்றவர்களால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர்; 15 பேர் காயமடைந்தனர்.
* இந்தாண்டு மே 3ம் தேதி கோவாவின் ஷிர்காவ் கிராமத்தில் உள்ள லைரை தேவி கோயிலின் ஆண்டு விழாவின்போது அதிகாலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழந்தனர்; சுமார் 100 பேர் காயமடைந்தனர். இந்தாண்டு கடந்த ஜனவரி 8ம் தேதி திருப்பதி வெங்கடேஷ்வர சுவாமி கோயிலில் வைகுண்ட துவார தரிசனத்திற்கு டிக்கெட் பெறுவதற்காக நூற்றுக்கணக்கான பக்தர்கள் தள்ளுமுள்ளு செய்ததில், 6 பக்தர்கள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
* 2024 டிசம்பர் 4 அன்று, ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் காட்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஒரு சிறுவன் காயமடைந்தார்.2024 ஜூலை 2 அன்று, உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸில், பாபா போலே பாபா என்று அழைக்கப்படும் நாராயண் சாகர் ஹரி நடத்திய பிரார்த்தனை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 121 பேர் உயிரிழந்தனர்.
2023 மார்ச் 31 அன்று, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு கோயிலில் ராம நவமி அன்று நடைபெற்ற ஹவான் விழாவின்போது, பழமையான கிணறு மீதான பலகை இடிந்து விழுந்ததில் 36 பேர் உயிரிழந்தனர்.
* 2003 ஆகஸ்ட் 27 அன்று, மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் கும்பமேளாவின் புனித நீராடலின்போது 39 பேர் உயிரிழந்தனர்; 140 பேர் காயமடைந்தனர். 2005 ஜனவரி 25 அன்று, மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள மந்தரதேவி கோயிலில் 340க்கும் மேற்பட்ட பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். 2008 ஆகஸ்ட் 3 அன்று, இமாச்சல் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள நைனா தேவி கோயிலில் பாறை விழுந்ததாக பரவிய வதந்தியால் 162 பேர் உயிரிழந்தனர். 2011 ஜனவரி 14 அன்று, கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் சபரிமலை பக்தர்கள் மீது ஜீப் மோதியதால் 104 பேர் உயிரிழந்தனர். 2013 அக்டோபர் 13 அன்று, மத்தியப் பிரதேசத்தின் ததியா மாவட்டத்தில் உள்ள ரதன்கர் கோயில் அருகே, பாலம் இடிந்து விழுந்ததாக கூறிய வதந்தியால் 115 பேர் உயிரிழந்தனர்.
* ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம்?
இந்தியாவில் கூட்ட நெரிசல் காரணமாக அப்பாவி மக்கள் உயிரிழந்தால், இந்திய தண்டனை சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. பொதுவாக ஐபிசி பிரிவு 304ஏ கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்தப் பிரிவு, கவனக்குறைவு அல்லது அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்துவதைக் குறிக்கிறது. இது ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றமாகும். இதற்கு அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம். மேலும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 174 கீழ் இயற்கைக்கு மாறான மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
இந்தப் பிரிவு, சந்தேகத்திற்கிடமான மரணங்களை விசாரிக்க மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் அளிக்கிறது. மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் ஐபிசி 304ஏ கீழ் வழக்கு மாற்றம் செய்யப்படுகிறது. கூட்ட நெரிசல் சம்பவங்களில் கைது நடவடிக்கைகள் பெரும்பாலும் சம்பவத்தின் தன்மை பொறுத்து அமைகின்றன. ஜாமீனில் வெளிவரக்கூடியவை பிரிவுகளில் வழக்கு பதியப்படுவதால், உடனடியாக கைது நடைபெறுவது அரிதாக உள்ளது. பெரும்பாலான கூட்ட நெரிசல் சம்பவங்களில், அரசு இழப்பீடு அறிவிப்பது, மாஜிஸ்திரேட் விசாரணைகளை உத்தரவிடுவது, பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மேம்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்படுகின்றன.