டெல்லி: பாகிஸ்தானின் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட பூஞ்ச் மற்றும் பிற பகுதியை சேர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கடிதம் அனுப்பியுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, காஷ்மீரில் பொது மக்கள் வசித்த பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது. அவற்றை இந்திய ராணுவம் முறியடித்தது. அதேநேரத்தில் அந்த பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சேதம் ஏற்பட்டது. இந்த பகுதிகளை மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், அந்த மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவி வழங்குமாறு பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘சமீபத்தில் நான் ஜம்மு காஷ்மீரின் பூஞ்சிற்கு சென்று இருந்தேன். பாகிஸ்தான் தாக்குதல் காரணமாக 4 குழந்தைகள் உட்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் திடீர் மற்றும் கண்மூடித்தனமான தாக்குதலால் குடியிருப்பு பகுதிகளில் மிகப்பெரும் சேதம் ஏற்பட்டு உள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளன. பல்லாண்டுகளாக தங்கள் கடின உழைப்பால் கட்டப்பட்ட வீடுகள் கைவிட்டுப்போய் உள்ளதாக பலரும் கவலை தெரிவித்தனர்.
ஆழமான நெருக்கடியில் இருக்கும் அந்த மக்களின் வலியைப் புரிந்து கொண்டு அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப அனைத்து உதவிகளையும் வழங்குவது நமது கடமை எனக்கூறியுள்ள ராகுல் காந்தி, பாகிஸ்தானின் பீரங்கி தாக்குதலில் பாதிக்கப்பட்ட பூஞ்ச் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் ஒன்றிய அரசு ஒரு உறுதியான மற்றும் தாராளமான நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் தொகுப்பை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.