புதுடெல்லி: ரதொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் எஸ்பிஐ வங்கியிடம் ரூ.31,850 கோடி கடன் பெற்றிருந்தன. இந்த கடன் தொகை பெறப்பட்ட காரணத்தை தாண்டி வேறு சில நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டிருப்பதாக எஸ்பிஐ கண்டறிந்துள்ளது. கடன் ஆவணங்களின் ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்கவில்லை என எஸ்பிஐ கூறி உள்ளது.
இதுதொடர்பாக எஸ்பிஐயின் கடன் மோசடிகளை அடையாளம் காணும் குழு நடத்திய சோதனையில் மொத்த கடனில் ரூ.13,667.73 கோடி, அதாவது 44 சதவீதம் கடன்களை திருப்பி செலுத்தவும், பிற நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. மேலும், ரூ.12,692.31 கோடி கடன் தொகை நிறுவனத்துடன் தொடர்புடைய தரப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரூ.6,265.85 கோடி பிற வங்கி கடன்களை திருப்பிச் செலுத்த பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் வாங்கி கடனை மோசடியாக வகைப்படுத்துவது குறித்து கடந்த மாதம் 23ம் தேதி எஸ்பிஐ தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனில் அம்பானி மீது ரிசர்வ் வங்கியில் ஸ்டேட் வங்கி புகாரளிக்க உள்ளது. எஸ்பிஐயை தொடர்ந்து பிற கடன் வழங்கிய நிறுவனங்களும் இந்த நடவடிக்கையை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.