Thursday, April 25, 2024
Home » மாநிலங்களவை தேர்தல் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு; ம.பியில் இருந்து மீண்டும் போட்டியிடுகிறார் எல்.முருகன்: தமிழக பாஜகவில் பரபரப்பு

மாநிலங்களவை தேர்தல் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு; ம.பியில் இருந்து மீண்டும் போட்டியிடுகிறார் எல்.முருகன்: தமிழக பாஜகவில் பரபரப்பு

by Francis

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தற்போது ஒன்றிய இணை அமைச்சராக இருக்கும் எல்.முருகன் மத்தியப் பிரதேசத்தில் இருந்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் 13 மாநிலங்களை சேர்ந்த 50 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகின்ற ஏப்ரல் 2ம் தேதி முடிவடைகிறது. மீதமுள்ள இரண்டு மாநிலங்களை சேர்ந்த 6 உறுப்பினர்கள் வருகின்ற ஏப்ரல் 3ம் தேதி ஓய்வு பெறுகிறார்கள். அதாவது உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், குஜராத், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், கர்நாடகா, உத்தரகாண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, அரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மாநிலங்களவைக்கு தேர்தல் நடைபெறுகிறது. குறிப்பாக இதில் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைய உள்ள ராஜ்யசபா எம்.பி.க்களில் ஒன்பது ஒன்றிய அமைச்சர்கள் உள்ளனர். அதில், பாஜக தலைவர் ஜேபி நட்டா (இமாச்சலப் பிரதேசம்), ரயில்வே, ஐடி மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் (ஒடிசா), ஐடி இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் (கர்நாடகா), குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் நாராயண் ரானே (மகாராஷ்டிரா), கல்வி அமைச்சர் தர்மேந்திரா ஆகியோர் அடங்குவர். தர்மேந்திர பிரதான் (மத்திய பிரதேசம்), சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா (குஜராத்) மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் (ராஜஸ்தான்) ஆகியோரும் இதில் இடம்பெற்றுள்ளனர்.

இதில் மாநிலங்களவை தேர்தலுக்கான அறிவிப்பு பிப்ரவரி 8ம் தேதி வெளியாகும் என்றும், பிப்ரவரி 15ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை பிப்ரவரி 16ம் தேதி நடைபெறும். விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 20ம் தேதி வரை தங்கள் பெயர்களை திரும்பப் பெறலாம் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் தரப்பில் கடந்த மாதம் 29ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநிலங்களவைக்கு போட்டியிட உள்ளவர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் போட்டியிட தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில் பாஜக தரப்பில் மாநிலங்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைமை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதில்,” தற்போது இணை அமைச்சராக இருக்கும் தமிழகத்தை சேர்ந்த எல்.முருகன், உமேஷ் நாத் மகராஜ், மாயா நரோலியா, பன்சிலால் குர்ஜர் ஆகியோர் மத்தியப் பிரதேசத்திலும், அதேப்போன்று தற்போது ரயில்வே அமைச்சராக இருக்கும் அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசா மாநிலத்திலும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு போட்டியிட உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகன், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தாராபுரம் சட்டப்பேரவை தேர்தலில், அமைச்சர் கயல்விழி செல்வராஜை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதைத் தொடர்ந்து அவர், ராஜ்யசபா எம்பியாகி, ஒன்றிய அமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தநிலையில், மக்களவை தேர்தலில் நீலகிரி எம்பி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அங்கு போட்டியிடுவதற்கான பணிகளையும் அவர் செய்து வந்தார். இந்தநிலையில், எல்.முருகன், மீண்டும் மத்தியப்பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுவார் என்று பாஜக அறிவித்துள்ளது. இதன்மூலம் அவர் மக்களவை தேர்தலில் இருந்து விலகியுள்ளார். ஏற்கனவே அண்ணாமலையும் போட்டியிட மாட்டேன் என்று கூறி வந்தநிலையில் எல்.முருகனும் போட்டியில் இருந்து விலகியுள்ளது கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

You may also like

Leave a Comment

seventeen − nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi