ராஜபாளையம்: நாங்குநேரி சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு அழைத்து சென்றவர்களை விடுவிக்க கோரி ராஜபாளையம் அருகே உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே செந்தட்டியாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் மலர்மன்னன்(25), மகேந்திரன்(25). இருவரையும் நாங்குநேரியில் மாணவர் வெட்டப்பட்ட சம்பவத்தில் கரிவலம்வந்தநல்லூர் போலீசார், கடந்த ஞாயிறு இரவு விசாரணைக்கு அழைத்து சென்றனர். நேற்று முன்தினம் காலை மலர்மன்னன், மகேந்திரனின் உறவினர்கள் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்திற்கு சென்று இருவரையும் வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு கூறினர்.
அப்ேபாது, விசாரணை முடிந்ததும் அனுப்பி வைப்பதாக போலீசார் கூறியுள்ளனர். பின்னர் மாலையில் இருவரின் உறவினர்களிடம் எழுதி வாங்கிக் ெகாண்டு மலர்மன்னன், மகேந்திரனை போலீசார் விடுவித்தனர். ஆனால், சிறிது நேரத்தில் மீண்டும் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உள்ளதாக கூறி போலீசார் அழைத்து சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் வேலாயுதபுரம் காவல்துறை சோதனை சாவடி அருகே நேற்று முன்தினம் இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, மலர்மன்னனின் சகோதரர் ஆண்டிச்சாமி, அவரது தாயார் வடிவு ஆகியோர் மண்ணெண்ணெய் கேனுடன் மறியலில் ஈடுபட்டனர். ஆண்டிச்சாமி திடீரென உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து குருவிகுளம் இன்ஸ்பெக்டர் (பொ) சக்திவேல் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். மலர்மன்னன், மகேந்திரன் ஆகியோரை விடுவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.