நன்றி குங்குமம் ஆன்மிகம்
ஒரு பயனையும் கருதாமல் ஒரு செயலில் ஈடுபடுவது உயர்ந்தநிலை. இதனை `நிஷ்காம கர்மம்’ என்பர். பயனைக் கருதியும், உலக சுகங்களைப் பெற ஆசை கொண்டு செயல்பட்டால், அதை `காமிய கர்மம்’ என்பர். அப்படி ஒரு உயரிய நிலைக்கொண்ட நிஷ்காம கர்மம் பற்றிய ஒரு அழகான கதை. சத்தியம், நேர்மை ஆகிய இவை இரண்டையும், தன் இரு கண்களாக போற்றி கேகய என்னும் தேசத்தினை மிக சிறப்பாக ஆண்டுவந்தான், பிரதாபபானு என்னும் மன்னன். பிரதாபபானுவின் தம்பி அரிமர்த்தனன், இவன் பகைவர்களை அழிப்பதில் மிகுந்த திறமையும் ஆற்றலும் பெற்றவன். மன்னரின் அமைச்சரவையில் இடம் பிடித்த, அமைச்சர் தர்மருசி என்பவன் அறவழியில் சிந்தித்து செயல்படக் கூடியவன்.
மதியூகி என்னும் அமைச்சரும், போரில் திறமையாக பல வெற்றியை குவிப்பவன். மன்னர் பிரதாபபானு, தன் தம்பி, மற்றும் திறமையான அமைச்சர்களின் துணையோடு, பிரதாபபானு திக்கு விஜயம் செய்து, ஏழு கண்டங்களையும் வென்று, ஏக சக்ராதிபதியாக உலகையே ஆண்டான். பிரதாபபானு, தான் எந்த செயல்களை செய்தாலும், அத்தனையும் பகவான் ஸ்ரீவாசுதேவனுக்கு அர்ப்பணம் என்று சொல்லி அர்ப்பணிப்பது அவனின் வழக்கம்.
ஒரு நாள், பிரதாபபானு வேட்டையாட விரும்பினான். ஆதலால் குதிரையில் ஏறி தன் படை வீரர்களுடன் காட்டிற்குப் புறப்பட்டான். பல விலங்குகளை வேட்டையாடினான். அப்பொழுது, அவனுடைய கெட்ட நேரம், விதியின் வலிமை துரத்தி காட்டுப் பன்றி வடிவத்தில் தோன்றியது. காட்டுப் பன்றி ஓடுவதைக் கண்ட குதிரை, காட்டுப் பன்றியை விரட்டிக் கொண்டு ஓடியது. ஆனால் அதனை பிடிக்க முடியாமல் சிறிது நேரத்திலேயே குதிரை சோர்வடைந்தது.
காட்டுப் பன்றியும், காணாமல் மறைந்துபோனது. மன்னரும், அவருடன் வந்த படைவீரர்களும் களைப் படைந்தனர். அளவில்லா பசியும் தாகமும் ஏற்பட்டது. எங்கும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. அந்த சமயத்தில் தூரத்தில் ஒரு குடிசை தென்பட்டது. அந்த குடிசையின் முன்பாக விளக்கு எரிவதை கண்டனர். அந்த குடிசையின் அருகில் சென்றார்கள். அங்கு ஒரு முனிவர் இருப்பதை கண்டனர்.
முனிவர், மன்னரை வரவேற்று உபசரித்தார். ஆனால், அந்த முனிவர், பிரதாபபானுவால் போரில் தோற்கடிக்கப்பட்டு, நாடு, மனைவி, மக்கள் என அனைவரையும் இழந்து வேறுவழி இன்றி காட்டில் புகுந்து ஒரு முனிவரை போல் வேடமிட்டு, வாழ்ந்து வந்திருக்கின்றார். அந்தப் போலி துறவியானவர், மன்னர் பிரதாபபானுவை கண்டு கொண்டார். அவரின் உள்ளம் மன்னனை பழிவாங்க துடித்தது. ஆனால், பிரதாபபானுவால் தன்னால் நாடிழந்த மக்களை அடையாளம் காண முடியவில்லை. உண்மையான துறவி என நினைத்து, தனக்கு அருளி ஆசிகளை வழங்க வேண்டும் என நினைத்து, முனிவரிடம் சென்று கேட்டார். அவரும் ஆசீர்வதித்து, முனிவரின் துணையோடு பிரதாபபானு, அருகில் இருந்த சுனையில் நீராடி, முனிவர் அளித்த காய்கனிகளை உண்டனர்.
முனிவர், மன்னனை பார்த்து கேட்டார்; “ சிறு வயதுடையவனாக இருக்கிறாயே.. முகத்தில் ராஜகளை தெரிகிறதே, நீ யாரப்பா?’’ என்று நயவஞ்சகமாகப் பேசினார். ஒரு நாட்டின் மன்னன், எல்லோரிடத்திலும் தான் யார் என்பதனை கூறக் கூடாது என்பது அரசநீதி. ஆகவே, தான் “ மன்னரின் அமைச்சன்’’ என்றும் படைகளை காட்டி, இவை எனக்கு பாதுகாப்பிற்காக வந்தவை என உரைத்தான். அதன் பிறகு இவர்கள் இருவரும் நீண்ட நேரம் பல விஷயங்களை பற்றி உரையாடினார்கள்.
முனிவர் மனம் கவரும் பேச்சில் வல்லவன். மன்னர் பிரதாபபானு, எளிதில் ஏமாறும் இயல்பும் கொண்டவர். இப்படியாக நேரம் செல்ல.. முனிவரிடம் “நீ யார்’’ என்று மன்னன் கேட்டார். “ நான் ஒரு பொருள் இல்லாத, வீடு இல்லாத, பிச்சைக்காரதுறவி’’ என்றான். துறவியின் பேச்சைக் கேட்டு மதி இழந்த மன்னன்,“ ஓ.. அப்படியா.. துறவிகளுக்கு வீடும், உறவும் எதற்கு? சிவபெருமானை எடுத்துக் கொள்ளுங்கள் அவர் வீடும் பொருளும் இல்லாதவர். இந்த உலகத்தையே படைத்தவர்’’. இறைவனோடு அந்த போலி துறவியையும் ஒப்பிட்டு உயர்த்திப் பேசினான். “ நான் இனி உங்களை குருவாக ஏற்றுக் கொள்கிறேன்’’ என்று கூறி போலி துறவியின் காலில் விழுந்தான்.
“நான் யார் என்று நீ.. கேட்டாய் அல்லவா? என் பெயர் ஏக தனு’’. இறைவன், முதல் முதலாக மனிதனைப் படைத்தான். அவ்வாறு, படைக்கப்பட்டபோது. நான் பெற்ற உடல் இந்த உடல். இன்னும் அழியவும் இல்லை, மறு பிறவி எடுக்கவுமில்லை’’. என்றார். இதை கேட்ட உடனே மன்னர் மிகவும் வியந்தான்.“என்னது நீங்கள் இதுவரை இறந்ததே இல்லையா! இறைவனால் படைக்கப்பட்ட அதே உடலோடு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா!’’ என்று தன்னுடைய மதியை அடமானம் வைத்துவிட்டு அவன் கூறியவற்றையெல்லாம் கேட்டு, ஆமாம்.. ஆமாம் என தலையாட்டத் தொடங்கினான்.
குருவிடம் பொய் சொல்லக் கூடாது என நினைத்த பிரதாபபானு, `சுவாமி நான் ஒரு அரசன்’ என்று கூறினான். அதைக் கேட்ட வேடதாரி, “நீ அரசன் என்பதை நான் முதலிலேயே அறிந்தேன். நீதிக்காக பொய்யுரைத்தாய் அதனால் என்ன பரவாயில்லை. உன் பெயர் பிரதாபபானு. உன் தந்தையின் பெயர் சத்தியகேது. நீ கேகய நாட்டின் அரசன். பொய் சொன்னதற்காக வருந்த வேண்டாம் அரசே’’ என்று அவனுடைய குற்ற உணர்வை போக்க முயற்சி செய்தான் கபட முனிவன்.
`உன்னை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. நான் உனக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றேன். என்ன வரம் வேண்டுமானாலும் கேள்’ என கபடதாரியான முனிவர் கூறினான். பேச்சில் மயங்கி அப்படியே முழுமையாக விழுந்துவிட்ட மன்னன், மகிழ்ச்சியில் பூரித்தான்.`எனக்குப் பிணி, மூப்பு, சாக்காடு வராமல் இருக்க வேண்டும். நான் யாருடன் போரிட்டாலும் அவர்கள் தோல்வியடைந்து, நானே வெற்றி பெற வேண்டும்’ என்ற சுயநலவாதியாக தன் பேராசையை வரமாக தரவேண்டும் என்று பிரதாபபானு கேட்கிறான்.
பிரதாபபானுடைய கேடுகாலம் இங்குதான் ஆரம்பமாகிறது. `நீ கேட்ட வரத்தை என்னால் உனக்கு அளிக்க முடியும். ஆனால், அதில் சில சிக்கல்கள் இருக்கிறது. ஒரு வரத்தைப் பெற வேண்டும் என்றால், அதற்காக சில வேலைகளை நீ செய்ய வேண்டும். அப்பொழுதுதான் உன்னுடைய தவமானது ஈடேறும் என்று கூறினார். “ஓ.. தவம் செய்ய வேண்டுமோ?’’.
“ நீ தவம் எல்லாம் செய்ய வேண்டாம். நான் ஒரு செயலை கூறுகின்றேன். அதை சரியாக நீ செய்துவிட்டால் போதும். அதன் பின்பு உன்னுடைய வாழ்க்கையில் நீ கேட்ட அத்தனை செல்வங்களும், நீ யாரிடம் போரிட்டாலும் அதில் வெற்றிபெற்று, நூறு கல்ப்ப காலம், வாழ்வாய்’’ என்று வாழ்த்தினான்.
“ என்ன செய்ய வேண்டும் கூறுங்கள்’’ என்று மன்னன் கேட்டான். “அந்தணர்களிக்கு, நீ உணவினை சமைத்து பரிமாறு. அவர்கள் போஜனத்தை உண்டால், உன்னுடைய பாவங்கள் நீங்கி, நீ ஆசைப்பட்ட அனைத்து வரங்களையும் பெறுவாய்’’ என்று கூறினான். மேலும் ஜபம், தவம், யாகம், யோகம், பூஜை ஆகியவற்றினால் மகிழும் பிரம்மா, விஷ்ணு, சிவன், ஆகியோர் அனைவரும் உன் வசப்படுவார்கள். பிறகு, உன்னை எதிர்க்க இந்த உலகத்தில் யாருமே இருக்க மாட்டார்கள்.
என்னை போல நீயும் சாகா வரம் பெற்று வாழலாம்’ என்று முனிவர் கூறினான். மன்னன் மனம் மகிழ்ந்தான். நீங்களும் நாட்டிற்கு வரவேண்டும் என்று முனிவரையும் அழைத்தார் மன்னன். “நான் விரதம் மேற்கொண்டு வருவதால், நாட்டிற்குள் வரக்கூடாது என்று கூறினார். ஆனால், உனக்காக நான் நிச்சயம் நாட்டிற்கு வருகிறேன், மூன்று நாட்களுக்குப் பிறகு உன் புரோகிதர் உருவில் வந்து இங்கே காட்டில் நடந்ததை எல்லாம் சொல்லுவேன். அப்பொழுது அந்தணர்களை அழைத்து போஜனம் செய்ய ஏற்பாடுகளை செய். அவர்கள் உணவு உண்டால் உன்னுடைய காரியம் வெற்றி பெறும்’’, என்றான். அவ்வாறே… சரி என்று மன்னன் தலையை அசைத்தான்.
“இரவு ஆகிவிட்டது… நீ.. சென்றுபடுத்துக் கொள். நீயும் உன்னுடைய குதிரையும் காலையில் உன்னுடைய அரண்மனையில் இருப்பீர்கள்’’ என்று கூறி அவனை அனுப்பிவைத்தான். அடுத்த கணம் முனிவர், தன்னுடைய நண்பனான காலகேது என்கின்ற அரக்கனை அழைத்து, மன்னனையும் அதன் குதிரையும் கொண்டு சென்று கேகய நாட்டில் விட்டுவிடுவா.. என்று ஆணையிட்டான். அவ்வாறே அந்த அரக்கன் செய்தான்.
விடிந்ததும், எழுந்து பார்த்த அரசனுக்கு, தான் அரண்மனையில் இருப்பதையும், கொட்டகையில் குதிரை இருப்பதையும் கண்டான். ஆஹா… முனிவர் கூறியபடியே நடந்துவிட்டதே என்று மனதில் மகிழ்ந்து அடுத்தது அவர் கூடிய படியே மூன்று நாட்கள் கழிந்த பிறகு, அந்த போலி துறவி நாட்டிற்குள் நுழைந்தான். அந்தணர்களை அழைத்து சுவையான உணவுகள் பரிமாறப்பட்டன. போலி முனிவர், புரோகிதர் வேடத்தில் வந்து உணவினை சமைத்தான். அனைவரும் உண்ணும் சமயத்தில் அசரீரி ஒலித்தது.
“அந்தணர்களே.. நீங்கள் யாரும் உணவை உண்ணாதீர்கள். ஏனென்றால் இந்த உணவில் மாமிசம் கலந்திருக்கிறது. நீங்கள் மாமிசத்தை உண்டீரென்றால் உங்களின் தவ ஆற்றல் கெட்டுவிடும். ஆகவே, இதை உண்ணாதீர்கள்’’ என்று கூறினார்.வந்திருந்த அந்தணர்கள் அத்தனை பேருக்கும் கோபம் தலைக்கு ஏறியது. “ஏய்! மன்னா.. இத்தனை அகங்காரமா.. உனக்கு? உணவு உண்ண வாவென்று அழைத்து, எங்களை அவமானப்படுத்தும்படி உணவில் மாமிசத்தை கலந்திருக்கின்றாய். உன்னை என்ன செய்கின்றேன் பார்’’ என்று கூறி அவர் சாபமிடத் தொடங்கினார்கள். `நீயும், உன் மனைவி குழந்தைகள், சுற்றமும் உறவும் என அத்தனை நபர்களும் அரக்கர்களாகப் பிறந்து துன்பப்படுவீர்கள்’’ என்றும் “அழிந்து போவீராக’’ என்றும் சாபமிட்டனர்.
அப்பொழுது மீண்டும் அசரீரி தோன்றி, `அவசரப்பட்டு சாபம் விட்டுவிட்டீர்களே.. மன்னர் ஏதும் அறியாதவர். இத்தனையும் செய்தது சூழ்ச்சியே ஆகும்’’. என்று கூறியது. ஆனால், கொடுத்த சாபத்தை திரும்பி பெற முடியாது எனக் கூறி அந்தணர்கள் சென்றுவிட்டனர். அதன்பிறகு, வேடதாரியான முனிவன், தன்னுடைய படைகலோடு வந்து, பிரதாபபானு, அவன் தம்பி, அமைச்சர்கள் என அனைவரையும் போரில் கொன்று அவர்களின் குடும்பத்தையே அழித்தான். சாகா வரம் வேண்டும் என்று கேட்ட பிரதாபபானு, அடுத்த பிறவியில், அதாவது, சாபத்தின் படி அவர்கள் மறுபிறவி எடுத்தார்கள். அந்த பிறவியிலேயேயும் அவர்கள் அரக்கர்களாகப் பிறந்தனர்.
யாராக பிறந்தனர் தெரியுமா? ஆச்சரியப்பட்டு போவோம். ஆம்..! மறுபிறவியாக பிரதாபபானு, ராவணனாகப் பிறந்தார். அவன் தம்பி அரியமார்த்தன், கும்பகர்ணனாக பிறந்தார். அமைச்சர் தர்மருசி, விபீஷணனாக பிறந்தார். ஆக, பூவுலகில் மீண்டும் அரக்கர்களாக பிறவி எடுத்தார்கள். இவர்களை அழிக்க ஒரு கல்பத்தில் திருமால் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாக அவதரித்து வதம் செய்தார்.
வரம் கேட்க உரிமை எல்லாருக்கும் உண்டு. ஆனால், கேட்கப்படும் வரம் மற்றவர்களுக்கு துன்பமாக இருக்கக் கூடாது. பிறர் துன்பமுற்று, நாம் சுகமாக இருக்க முடியாது. கேட்ட வரத்தை, `சுயம்பு மனு’ கேட்ட வரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இதன் உண்மை விளங்கும்.
தொகுப்பு: பொன்முகரியன்