மூணாறு: கேரளா மாநிலம் மூணாறு அருகே தேவிகுளம்-லாக்காடு மலைச் சாலையில் மலைச்சாலையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கேரளா மாநிலம் மூணாறில் கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலைக்கு உட்பட்ட தேவிகுளம்-லாக்காடு இடையிலான கேப் ரோடு மலைச் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதில் மலையில் உள்ள பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தது. இதையடுத்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போக்குவரத்து தடைபட்டிருந்தது. இந்த சாலையை சீரமைக்கும் பணி தொடங்கிய நிலையில், கனமழை மற்றும் கடும் மேகமூட்டம் காரணமாக சாலை சீரமைப்புப் பணிகள் தாமதமாகி வந்தன.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை சற்று ஓய்ந்ததை அடுத்து சாலை சீரமைப்புப் பணிகள் நடந்து வந்தன. ேஜசிபி இயந்திரங்கள் கொண்டு பாறைகள் மற்றும் மண்ணை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்காலிகமாக சீரமைக்கபட்ட பகுதியில் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது ஒரு வழிப்பாதையில் கார்கள் உள்ளிட்ட சிறிய வாகனங்கள் மட்டும் சென்று வருகின்றன. கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. கனமழை காரணமாக இரவு நேர போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.