Sunday, December 3, 2023
Home » வருத்தம் தரும் வாய்ப்புண்!

வருத்தம் தரும் வாய்ப்புண்!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயம்தான். ஆனால், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்னை பெரிதாகிவிடும். தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து, உளுந்து அளவுக்குக் குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும். சாப்பிடும்போதும் பேசும் போதும் வலி அதிகமாகும். கழுத்தில் நெறிகட்டும், காய்ச்சல் வரும், உடல்வலி, தலைவலி எனத் தொல்லைகள் தொடரும்.

யாருக்கு வரும்?

குழந்தை முதல் முதியோர்வரை இது எல்லோருக்கும் வரலாம். பொதுவாக, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு வாய்ப்புண் வரும் வாய்ப்பு அதிகம். அடுத்து, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும் இதன் தாக்கம் அதிகம்.தவிர வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடுபவர்கள், புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோருக்கு அடிக்கடி வாய்ப்புண் வரலாம். எந்த நேரமும் வேலை, வேலை என்று பரபரப்பாக இருக்கிறவர்களுக்கும், மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் வாய்ப்புண் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை கொடுக்கும்.

காரணம் என்ன?

நீண்ட நாட்களுக்குச் சரிவிகித உணவைச் சாப்பிடாதவர்களுக்கு இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி6 மற்றும் பி12 குறைபாடு ஏற்படும். இதனால் ரத்த வெள்ளை அணுக்கள் குறைந்துவிடும். இதன் விளைவாக உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து வாய்ப்புண் வரும்.ஆண்களைவிடப் பெண்களுக்கு இந்தத் தொல்லை அதிகம். காரணம், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. இதனால் இவர்களுக்கு வாய்ப்புண் வருகிறது. அடுத்து, இவர்கள் சாப்பிடும் கருத்தடை மாத்திரைகளும் வாய்ப்புண் ஏற்படக் காரணமாகின்றன.

வாய்ப்புண் வருவதற்கு ஒவ்வாமையும் முக்கியக் காரணம்தான். உணவு ஒவ்வாமை – குறிப்பாகச் செயற்கை வண்ண உணவுகள் – மருந்து ஒவ்வாமை, பற்பசை ஒவ்வாமை போன்றவற்றை உதாரணங்களாகக் கூறலாம். அதிகமாகக் கவலைப்பட்டாலும் வாய்ப்புண் வரும். உதாரணம், மாணவர்களுக்குத் தேர்வு நேரங்களில் மன அழுத்தம் அதிகரிப்பதால் வாய்ப்புண் வருவது.
வைட்டமின் பி2 குறைபாடு இருந்தால், வாயின் இரண்டு ஓரங்களிலும் வெள்ளை நிறத்தில் வெடிப்புகள் தோன்றும். இரைப்பையில் புண் உள்ளோருக்கு, அங்கே சுரக்கிற அதீத அமிலம் தூக்கத்தில் உணவுக்குழாயைக் கடந்து வாய்க்கு வந்துவிடும். அப்போது தொண்டையிலும் வாயிலும் புண் ஏற்படும்.

கூர்மையான பற்கள் இருந்தால், அவை உள் கன்னத்தைக் குத்தி, புண்ணை உண்டாக்கும். கவனக்குறைவாகச் சாப்பிடும்போது கன்னம் கடிபட்டு வாய்ப்புண் ஏற்படலாம். பல் துலக்கும்போது பிரஷ் குத்துவதால் புண் உண்டாகலாம். செயற்கைப் பற்கள் சரியாகப் பொருந்தவில்லை என்றால், அடிக்கடி வாய்ப்புண் வரும். மிகச் சூடாக காபி/டீ குடித்தால்கூட வாய்ப்புண் வருவதுண்டு. சிலர் வாயின் ஒரு பக்கத்தில் மட்டுமே உணவை மெல்லுவார்கள். இது நாளடைவில் வாய்ப்புண்ணுக்கு வழியமைக்கும்.

கிருமிகளின் தாக்குதல்

பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளின் தாக்குதல் காரணமாக வரும் கிரந்தி நோய், வின்சன்ட் நோய், சின்னம்மை, தட்டம்மை, வாயம்மை, எய்ட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படும்போது வாயில் புண் வருவது வழக்கம். ‘கான்டிடா ஆல்பிகன்ஸ்’ (Candida albicans) எனும் பூஞ்சைக் கிருமிகளின் பாதிப்பால் நாக்கில் ‘கட்டித் தயிர்’ போல வெண்படலம் உருவாகிப் புண் ஏற்படும். அடிக்கடி ‘ஆன்ட்டிபயாட்டிக்’ மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும் அஜீரணக் கோளாறு இருப்பவர்களுக்கும், இது நிரந்தரத் தொந்தரவாகிவிடும். பல் ஈறு கோளாறுகள், சில மருந்துகளின் பக்கவிளைவு காரணமாகவும் வாய்ப்புண் வருவதுண்டு.

என்ன சிகிச்சை?

பெரும்பாலான வாய்ப்புண்கள் சரியான உணவு மூலமே குணமாகி விடும். அதேநேரத்தில், வாய்ப்புண் வெகு நாட்களுக்கு ஆறாமல் இருந்தால், அது புற்றுநோயாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு. ஆகவே வாய்ப்புண்தானே என்று அலட்சியமாக இருக்காமல், காரணம் அறிந்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.மருத்துவரின் ஆலோசனைப்படி ஆன்ட்டிசெப்டிக் திரவத்தைப் பயன்படுத்தி வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் சீக்கிரத்தில் குணமாகும்.

ஸ்டீராய்டு மற்றும் வலி மரத்துப் போகச் செய்யும் களிம்புகளை வாய்ப்புண்ணில் தடவலாம். இவற்றோடு வலி நிவாரணி மாத்திரைகளையும் ஒரு வாரம் சாப்பிட வேண்டும். லாக்டோபேசில்லஸ் (Lactobacillus) மருந்து கலந்த மல்ட்டி வைட்டமின் மாத்திரை மற்றும் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மாத்திரைகளை ஒரு மாதம் சாப்பிட வேண்டும். அப்போதுதான் வாய்ப்புண் மீண்டும் வராது. பூஞ்சையால் வரும் வாய்ப்புண்ணுக்குக் காளான் கொல்லி மருந்தைத் தடவினால் நல்ல பலன் கிட்டும்.

தடுப்பது எப்படி?

வாய்ச்சுத்தம் காப்பது வாய்ப்புண்ணைத் தடுப்பதற்கான முதல் படி. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் காண்பித்து ‘ஸ்கேலிங்’ முறையில் பற்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். கூரான பற்களைச் சரி செய்ய வேண்டும். செயற்கைப் பல்செட்டால் பிரச்னை வருகிறது என்றால், அதை மாற்றிவிடுவது நல்லது. ‘சோடியம் லாரில் சல்பேட்’(Sodium lauryl sulphate) கலந்திருக்கும் பற்பசையைப் பயன்படுத்தக் கூடாது. புகை பிடிக்கக் கூடாது. வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடக் கூடாது. மது ஆகாது. நீரிழிவு நோயாளிகள் நோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவு ஒவ்வாமை/மருந்து ஒவ்வாமை இருந்தால் தவிர்க்க வேண்டும்.

எந்த உணவு முக்கியம்?

பால், தயிர், முட்டை, இறைச்சி, ஈரல், மீன், நண்டு, கீரை, பச்சையிலைக் காய்கள், வெல்லம், தேன், பேரீச்சை, முளை கட்டிய பயறுகள், கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி, கோதுமை, கேழ்வரகு, சோயாபீன்ஸ், தக்காளி, முருங்கைக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டால் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக வாய்ப்புண் ஏற்படுவதை நிச்சயம் தடுக்கலாம்.

தொகுப்பு: இளங்கோ

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?