‘‘மாங்கனி கட்சியில் தூதரின் தலையீட்டால் அன்பானவரின் கண்மணிகள் கலக்கத்தில் உள்ளார்களாமே தெரியுமா..’’ எனக்கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி கட்சியில் புத்தாண்டு முதலே தந்தை, மகன் இடையிலான விரிசல் அதிகரித்தபடி இருந்ததாம்.. அதற்கு முன்பே கூட்டணி தொடர்பான புகைச்சல் குடும்பத்துக்குள் நிலவியிருக்கு.. மலராத கட்சியோ தற்போதைக்கு வேறு கணக்கு போட்டிருக்க, அன்பான மணியோ, நீயா… நானா… எனும் மோதலுக்கு தயாரானாராம்.. கூட்டணிக்கே வேட்டு விழும் சூழல் ஏற்படவே உண்மை களநிலவரத்தை அறிய டெல்லி உத்தவுக்கிணங்க தோட்டத்துக்கு பவர்புல் தூதர் பறந்தாராம்.. தந்தை வெளிப்படுத்திய திருவுளத்தை கேட்டறிந்த தூதர், டெல்லிக்கு உடனே தெரியப்படுத்த மலராத கட்சியோ தலைபக்கம் முழுமையாக சாய்ந்து விட்டதாம்..
எல்லா பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும் என பச்சைக்கொடி காட்ட டென்ஷன் இல்லாமல் புன்சிரிப்போடு தோட்டம் திரும்பினாராம் மாங்கனியை விதைத்தவர்.. அத்தோடு தடாலடி ஆக்ஷன்களிலும் மீண்டும் இறங்கி விட்டாராம்.. இதனால் அன்பின் கண்மணிகள், தங்களின் எதிர்காலம் குறித்த கதிகலக்கத்தில் இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பூட்டிய அறைக்குள் உள்துறையானவர் பார்த்த வைத்தியத்தால் மாஜி போலீஸ்காரர் வெலவெலத்துப் போனாராமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மலராத கட்சியின் மாநில தலைவராக இருந்த மாஜி போலீஸ்காரருக்கு தூங்கா நகரத்துல உள்துறை மந்திரி வைத்தியம் பார்த்ததா கட்சிக்குள்ளார ஒரே குசுகுசுப்பாக இருக்குதாம்.. தன்னை எப்போதும் ஒரு மாபெரும் தலைவர் என கருதிக்கொண்டிருக்கும் மாஜி போலீஸ்காரரு, பதவி பறிப்பில் இருந்து பெரும் பரிதவிப்புக்கு ஆளாகியிருக்காராம்..
இலைக்கட்சி தலைவருக்கும், மாஜி போலீஸ்காரருக்கும் இடையே நடந்த மோதலின்போது இலைக்கட்சி தலைவரை தற்குறி என கூறியதோடு மேற்கு தொடர்ச்சிமலை பகுதியில் பதுங்கியிருந்தார் என கடுமையாக சாடினாராம்.. இது இலைக்கட்சி தலைவரின் மனதில் ஆழமான வடுவாக இருக்குதாம்.. இதற்கு எதிர்வினைதான் மாஜி போலீஸ்காரரின் பதவி பறிப்பாம்.. என்றாலும் அதிகார பவர் இல்லை என்பதால் அவரை சுற்றி செல்லும் கூட்டம் முற்றிலும் நின்னுபோச்சாம்.. இதற்கிடையில் தூங்கா நகரத்துக்கு உள்துறை மந்திரி வந்தப்ப அவரிடம் அல்வா நகரத்து புதுத்தலைவர் தனக்கு எதிராக நடக்கும் காரியங்கள் குறித்து புட்டு புட்டு வைத்ததோடு எதற்கும் கட்டுப்படாமல் தன்னிச்சையாகவே போராட்டங்களை அறிவித்தது குறித்தும் சொன்னாராம்.. இதனை உள்துறை ெராம்ப உன்னிப்பாகவே கேட்டுக்கிட்டாராம்..
மேடைக்கு மாஜி போலீஸ்காரர் வந்ததும், அவரது பெயரை சொன்னதும் கைதட்டல் கொஞ்சம் அதிகமாகவே இருந்துச்சாம்.. அவரது ஆதரவாளர்கள் மூலம் கைதட்டுவதற்கு ஆட்களை ஏற்பாடு செஞ்சிட்டு வந்து, இந்த வேலையை செய்ய சொன்னதும் மாஜி என்ற விவரத்தையும் சொல்லியிருக்காங்க.. இதனால கோபத்தின் உச்சத்துக்கே சென்ற உள்துறை கதவை பூட்டிக்கிட்டு கடுமையான எச்சரிக்கை விடுத்ததாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. தனது செல்வாக்கை கண்டு டெல்லி பயம் கொள்ளும் என்றிருந்த மாஜி வெலவெலத்து போனாராம்.. இனிமேல் அவருக்கு பதவி என்பது எட்டாக் கனியாகத்தான் இருக்குமுன்னு அந்த கட்சிக்காரங்களே சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பத்து ஆண்டுகளுக்கு மேலாக பதிவுத்துறையில் ஒரே இடத்தில் இருந்து சொத்துகளை வாரிவாரி குவிக்கும் சார்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் தூங்குகிறதாமே தலைமை..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘பதிவுத்துறையில் முருகனின் இரண்டாம் படை வீடு அமைந்துள்ள ஊரின் அருகே பட்டினம் என முடியும் சார் பதிவாளர் ஆபீசுல கடந்த பத்து ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வருபவர் முருகனின் மூன்றெழுத்து மனைவியானவர் பெயரைக் கொண்டவர். இவர், பல போலி ஆவணங்களை பதிவு செய்து பலகோடி சொத்து குவித்து வருவதாக சென்னை வரை புகார்கள் பறந்திருக்காம்.. இவர் நெல்லை முன்னாள் பெண் டிஐஜியின் செல்வாக்கால் நியமனம் செய்யப்பட்டதால் இவரை யாருமே அங்கிருந்து மாற்ற முடியவில்லையாம்.. அப்படியே மாற்ற முயன்றாலும் முத்துக்கு பெயர்போன ஊரின் குறிப்பிட்ட ரவுடிகளை வைத்து மிரட்டி விடுவாராம்.. இதனால், இவரை யாராலும் அந்த
இடத்தில் இருந்து அசைக்க முடியவில்லையாம்.. அதோடு பல சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஒருநாள் மட்டுமே சென்று பல போலி ஆவணங்களை பதிவு செய்துவிட்டு மீண்டும் தான் பணிபுரியும் அலுவலகத்திற்கே வந்துவிடுவாராம்..
இவர் பதிவுக்காக தாக்கல் செய்யும் ஆவணங்களை தாக்கல் செய்து பதிவு செய்த பிறகு, சொத்தின் பல பக்கங்களை உரிமையாளருக்கு தெரியாமல் போலி கையெழுத்து போட்டு இணைத்து விடுவாராம்.. இப்படி பலர் தங்களின் சொத்துகளை இழந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க கூட வழிதெரியாமல் ரொம்பவே பரிதவித்து வருகிறார்களாம்.. இவர் மீது பல வருடங்களாக அடுக்கடுக்கான புகார்கள் வந்தாலும் இவருக்கு முழு பாதுகாப்பை உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழங்கி வருகிறதாம்.. இதற்கு, தொடர்ந்து ஒரே சமூகத்தை சார்ந்தவர்களே தென் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் பணிபுரிவதே கூடுதல் காரணம்னு சொல்றாங்க.. இவர் தான் பணிபுரியும் அலுவலகத்திலேயே தனது பெயரில் சொத்துகளை வாங்கி குவித்து வருவதும், அதில் வீடுகட்டி விற்பனை செய்வதையும் தொழிலாக செய்துக்கிட்டு இருக்கிறாராம்..
வேலியே பயிரை மேய்கிற கதையாக, சம்பந்தப்பட்ட அலுவலர் மீது பத்து ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்க முடியாமல் சென்னை அலுவலகமும் தூங்குகிறதாம்.. பதிவுத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தும், சார்பதிவாளர் பதிந்த அனைத்து அலுவலகங்களுக்கும் சிறப்புத் தணிக்கை போடாதாது ஏன் என்று தென் மாவட்ட பதிவுத்துறை அதிகாரிகளும், பாதிக்கப்பட்டவர்களும் மனக்குமுறலை மனுவாகக் கொடுத்தும் இன்னும் கண்டும்காணாமல் தான் இருக்கிறார்களாம்.. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் நீதிமன்றத்தை நாட உள்ளார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இரவு நேர டாக்டர்ஸ் இல்லாததால தனியார் மருத்துவமனைக்கு போகச்சொல்லி சிபாரிசு கடிதம் கொடுத்து அனுப்புறதா ஜனங்க புலம்புறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டத்துல தண்டத்துல தொடங்கி பட்டுல முடியுற தாலுகாவுல, புரம் என்று முடியுற ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருது..
இந்த சுகாதார நிலையத்துல இரவு நேரங்கள்ல டாக்டர்ஸ்ச பார்க்க முடியாதாம்.. காரணம், இரவு நேரத்துல டாக்டர்ஸ் வருவதே கிடையாதுன்னு புகார் சொல்றாங்க.. நர்ஸ்கள் மட்டும் பணிபுரிஞ்சு வர்றாங்களாம்.. இதுல அந்த சுகாதார எல்லைக்கு உட்பட்ட ஜனங்க வயிற்று வலி, மயக்கம், தலைவலின்னு சிகிச்சைக்கு போனா, தனியார் மருத்துவமனையோட லெட்டர் பேடை கொடுத்து அங்க போய் சிகிச்சை எடுக்க அனுப்புறாங்களாம்.. கவர்மெண்ட் மருத்துவமனைக்கு போன அவங்களே தனியார் மருத்துவமனைக்கு சிபாரிசு கடிதம் கொடுத்து அனுப்புறாங்களேன்னு ஜனங்க புலம்புறாங்க.. மருத்துவமனை இருந்தும், இதுபோல ஒரு சில நபர்களால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுதுன்னு விஷயம் தெரிஞ்சவங்க புகாரா சொல்றாங்க.. இந்த பிரச்னைக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கணும்னு ஜனங்க எதிர்பார்க்குறாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.