ஊத்துக்கோட்டை: ஊரக வளர்ச்சித்துறையில் அனைத்து நிலைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற தேவையான ஊழியர் கட்டமைப்பை அமைக்க வேண்டும், ஊராட்சி செயலர்களுக்கு விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும், கணினி உதவியாளர்கள், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரை பணிவரன் முறை செய்ய வேண்டும், 100 நாள் வேலை திட்டத்திற்கு தனி ஊழியர் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
10 ஆண்டுகள் பணி முடித்த தொழில் நுட்ப உவியாளர்கள், பதிவறை எழுத்தர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 2வது நாளாக வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு ஊழியர்கள் பணிக்கு வராததால் ஊரக வளர்ச்சி துறையில் 2வது நாளாக வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டது.
இதேபோல் திருத்தணி, திருவாலங்காடு, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டது. ஊராட்சி செயலாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் அரசுப்பணிகள் அடியோடு முடங்கியது. அலுவலகம் வந்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.