டாக்கா: வங்கதேசத்தில் பல்வேறு அமைப்புக்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இடஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் அரசுக்கு எதிராக மாணவர்களின் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் அங்கு வன்முறையும், கலவரங்களும் வெடித்தது. இதனை கட்டுப்படுத்த காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் உயிரிழப்புக்கள் அதிகரித்தது.
இதன் எதிரொலியாக போராட்டம் தீவிரமடைந்த நிலையில் பிரதமர் ஹசினா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். தற்போது அங்கு இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் பல்வேறு அமைப்புக்களால் ஆங்காங்கே போராட்டங்கள், சாலை மறியல் மற்றும் உள்ளிருப்பு போராட்டங்கள் நடத்தப்படுவதால் போக்குவரத்து முடங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படுகின்றது. ஷாபாக் சந்திப்பில் ரிக்ஷா ஓட்டுபவர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேட்டரியால் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் நிலவி வரும் நிலையில் ரிக்ஷா ஓட்டுனர்களின் சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து முடங்கியது.
நீண்ட நேரம் போக்குவரத்து முடங்கிய நிலையில் பலர் தங்களது வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்திவிட்டு நடந்தே செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். வங்கதேசத்தின் டாக்கா, நம்பியோ டிராபிக் பட்டியலில் போக்குவரத்து நெரிசலில் உலகிலேயே ஐந்தாவது மோசமான நகரமாக இடம்பெற்றுள்ளது.