புதுடெல்லி: எஸ்.வி.சேகர் தொடர்பான வழக்கை கீழமை நீதிமன்றங்கள் விசாரிக்க தடையில்லை என தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சித்து நடிகரும், பாஜ பிரமுகருமாக இருந்த எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், இந்த வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்யக் கோரி எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக எஸ்.வி.சேகர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் பி.கே.மிஸ்ரா ஆகியோர் நேற்று வழங்கிய தீர்ப்பில், ‘‘இந்த விவகாரத்தில் எஸ்.வி.சேகருக்கு எந்தவித நிவாரணமும் வழங்கவோ அல்லது உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கவோ கண்டிப்பாக முடியாது. இந்த வழக்கை கீழமை நீதிமன்றங்கள் விசாரிக்கலாம். அதற்கு தடை இல்லை என உத்தரவிட்ட நீதிபதிகள், எஸ்.வி.சேகரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.