ஓசூர்: உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவை மதிக்காமல், தமிழ்நாட்டிற்கு தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், மாநில எல்லையில் முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று காலை முதலே ஓசூரில் விவசாயிகள் திரண்டனர். பின்னர், அனைவரும் மாநில எல்லை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அவர்களை ஓசூர் இஎஸ்ஐ மருத்துவமனை அருகே உள்வட்ட சாலை சந்திப்பில், போலீசார் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினர். அப்போது, விவசாயிகள் மற்றும் பெண்கள் திடீரென காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு, கர்நாடக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது, விவசாயிகள் கூறுகையில், காவிரி நீர் தமிழகத்துக்கு கிடைக்கும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.