ஆவடி: வெள்ளானூர் ஊராட்சியில் பராமரிப்பின்றி கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆவடியை அடுத்த வில்லிவாக்கம் ஒன்றியம், வெள்ளானூர் ஊராட்சியில் வெள்ளானூர் காலனி குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு, சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த 2018-2019ம் ஆண்டு தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை திட்டப் பணியின் வாயிலாக சுத்திகரிப்பு நிலையம் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது.
அந்த சுத்திகரிப்பு நிலையம் மக்கள் பயன்பாட்டிற்காக, கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. மேலும், கடந்த 3 மாதமாக பராமரிப்பின்றி பாழாகிக் கிடக்கிறது. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரனிடம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அப்பகுதிமக்கள் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.