எதை வேண்டுமானால் ரீல்ஸாக்கலாம், டிரெண்டிங்கில் வர என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்னும் மனநிலை இப்போதைய இளைஞர்களிடம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அப்படித்தான் உத்திரபிரதேசம், ஷஹிபாபாத் பகுதியைச் சேர்ந்த வைஷாலி சௌத்ரி என்னும் சமூக வலைத்தள பிரபலப் பெண் தான் சென்று கொண்டிருந்த காரை ஹைவேயில் நடு ரோட்டில் நிறுத்தி ரீல்ஸ் செய்திருக்கிறார். இதற்கு இந்திய சாலை விதிமீறல் சட்டத்தின் கீழ் ரூ.17,000 அபராதம் விதித்து பணத்தை செலுத்தியிருக்கிறாராம் வைஷாலி. மேலும் அவரின் இந்த வீடியோவிற்கும் கூட பல சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புகளும், விமர்சனங்களும் தெரிவித்துவருகிறார்கள். இந்த விஷயத்தில் அடிப்படையிலேயே வட இந்தியர்களால் போடப்படும் வீடியோக்கள் பலவும் இப்படி சர்ச்சைக்குரியதாகவே அடிக்கடி சிக்கலில் மாட்டிக்கொள்கின்றன. டிரெண்டிங் என்றாலும் சமூகப் பொறுப்பும் வேண்டும் என பலரும் வைஷாலியை டிரோல் செய்து வருகிறார்கள்.
வேகமான தரப் பரிசோதனை!
இப்போதெல்லாம் எது எப்போது வைரலாகிறது என்றே தெரியவில்லை. அப்படித்தான் பெண் ஒருவர் அரிசியின் தரம் சோதனையிடும் வீடியோ டிரெண்டிங்கில் சுற்றிக்கொண்டிருக்கிறது. அரிசி தரம் பார்ப்பதெல்லாம் ஒரு விஷயமா எனக் கேட்கலாம். ஆனால் அந்த வீடியோவில் அந்தப் பெண் கையில் கூர்மையான ஒரு கத்தி போன்ற கருவியுடன் ஒரு ஓரமாக அமர்ந்திருக்கிறார். பக்கவாட்டில் அரிசிகள் நிரப்பிய சாக்குப் பைகளுடன் பணியாளர்கள் வேகமாக நடந்து செல்கிறார்கள். இந்தப் பெண் அவ்வளவு லாவகமாக தாண்டிச்செல்லும் நபர்கள் கொண்டு செல்லும் மூட்டைகளைக் குத்தி அரிசியை எடுத்து உடனடியாக சோதித்து தெரியப்படுத்துகிறார். கூர்மையான ஆயுதம் சற்றே தவறினாலும் நடந்துசெல்லும் பணியாளர்கள் மேல் குத்திவிடும். ஆனாலும் அவ்வளவு கவனமாகவும், வேகமாகவும் அப்பெண் மூட்டையில் குத்தி சிறிது அரிசியை மட்டும் கைகளுக்குக் கொண்டு வந்து சோதிக்கும் இந்த வீடியோவை @techniiverse என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 25 மில்லியன் மக்கள் இதுவரை பார்வையிட்டுள்ளனர். ஒருவேளை உலக சாதனைக்கு அனுப்பி வைத்தால் கூட இவருக்கு சாதனைக்கான அங்கீகாரம் கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.