பெரம்பூர்: ஓட்டேரி சேமாத்தம்மன் காலனி 9வது தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (எ) எலி. சரித்திர பதிவேடு ரவுடியான இவரது மகன்களான 2 சிறுவர்கள், நேற்று முன்தினம் ஓட்டேரி ஏகாங்கிபுரம் 4வது தெரு வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது, இவர்களை வழிமறித்த 3 பேர், கற்கள் மற்றும் கையால் தாக்கினர். இதில், காயமடைந்த 2 சிறுவர்களும், வீட்டிற்கு வந்து தனது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்தனர்.
அதன்பேரில், சிறுவர்களின் தாய் குட்டியம்மா, ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மங்களபுரம் கிருஷ்ணதாஸ் சாலையை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் அயனாவரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், மங்களபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (20) ஆகிய 3 பேர் சேர்ந்து, இந்த 2 சிறுவர்களை தாக்கியது தெரியவந்தது.
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சிறுவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்த ஓட்டேரி போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரது கூட்டாளிகளான 2 சிறுவர்களை சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.