திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் சில மாணவிகள் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் குழு ஆரம்பித்தனர். அதில் தங்கள் காதலர்கள்தான் ரீல்ஸ் போடுவதில் கெத்து என்ற பாணியில் பதிவுகளை போட்டு வந்துள்ளனர். அதே சமயம் திருப்பூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கணபதிபாளையம் அரசு பள்ளி மாணவிகளும் இதுபோலவே குழு சேர்ந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதில் தங்கள் காதலர்கள்தான் கெத்து? என பதிவுகளை போட்டு வந்துள்ளனர்.
இரு பள்ளி மாணவிகளுக்கும் இடையில் நான் பெரிய ஆளா? நீ பெரிய ஆளா? என்ற பாணியில் மோதல் பதிவுகள் போடுவது தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் பதிவுகள் இரு தரப்பினரையும் ஆத்திரப்படுத்தியது. கோபமடைந்த ஜெய்வாபாய் பள்ளி மாணவிகள் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் நேற்று முன்தினம் பள்ளி முடிந்ததும் பஸ் ஏறி கணபதிபாளையம் பள்ளிக்கு முன்பு சென்றனர். அங்கு கணபதிபாளையம் பள்ளி மாணவிகள் 20 பேர் வந்தனர்.
அப்போது 2 பள்ளி மாணவிகளுக்கும் இடையே நடுரோட்டில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென மாணவிகள் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். சில மாணவிகள் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டனர். விரட்டி விரட்டி மோதிக்கொண்டனர். சிறிது நேரத்தில் அந்த இடமே போர்க்களமானது. இதைப்பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மோதலை அவர்கள் தடுக்க முயன்றனர். ஆனால் மோதலில் ஈடுபட்ட மாணவிகள் தடுக்க வந்தவர்களை தகாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்தனர்.
கடைசியில் ஒரு வழியாக சமாதானம் அடைந்த மாணவிகள் வீடு திரும்பினர். இது குறித்து பள்ளி நிர்வாகங்கள், பல்லடம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகராறில் ஈடுபட்ட மாணவிகளின் பெற்றோரை வரவழைத்து பேசினர். மாணவிகளுக்கு பள்ளி சார்பில் கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரீல்ஸ் தகராறில் மாணவிகள் நடுரோட்டில் மோதிக்கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.