புழல்: செங்குன்றம் – பொத்தூர் மாநில நெடுஞ்சாலையில் குவிந்துள்ள குப்பை கழிவுகள், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கையால் அகற்றி சீரமைக்கப்பட்டது. செங்குன்றம் அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கலைஞர் நகர், செங்குன்றம் – பொத்தூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை பகுதியில் குப்பை மற்றும் கழிவு பொருட்கள் மலைபோல் குவிந்துள்ளன. இந்த, குப்பை கழிவுகளை பன்றிகள் கிளறி விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால், இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பேருந்துகளில் செல்லும் மாணவ – மாணவிகள், பொதுமக்கள் மற்றும் அருகிலுள்ள கலைஞர் நகர், வர பிரசாத்ராவ் நகர், பம்மது குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈஸ்வரன் நகர், காட்டுநாயக்கன் நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நெடுஞ்சாலை பகுதியில் குவிந்துள்ள குப்பை கழிவுகளை அகற்றி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நல்லூர் ஊராட்சி நிர்வாகத்திடம், சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், சாலையில் குவிந்துள்ள குப்பை கழிவுகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு, டிராக்டரில் ஏற்றப்பட்டு அவ்விடம் சுத்தம் செய்யப்பட்டது.
மேலும், இங்கு இனிமேல் குப்பைகள் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. மாநில நெடுஞ்சாலையில் தேங்கி இருந்த குப்பை கழிவு பொருட்களை உடனடியாக அகற்றிய நல்லூர் ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.