சென்னை: சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பீக் ஹவர் மின் கட்டணம் 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதம் குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொழில் நிறுவனத்தினர் பயன்படுத்தும் சோலார் மின்சாரத்திற்கான நெட்வொர்க் கட்டணமும் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கான உச்சநேர நுகர்வுக்கான மின்கட்டணத்தை 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்க அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு விரிவான வழிகாட்டுதல்கள் வழங்க எரிசக்தி துறைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், இந்த கட்டண குறைப்பு மூலம் ஏற்படும் நிதி இழப்பு குறித்து ஆராய்ந்து அதற்கான இழப்பீட்டு தொகையை மானியமாக தமிழக மின் வாரியத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
மேலும், கடந்த அக்.10ம் தேதி சட்டப்பேரவையில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கான உச்சநேர நுகர்விற்கான மின்கட்டணம் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் வரை வசூலிக்கப்படாது என்றும், தொழில்நிறுவனத்தினர் பயன்படுத்தும் சோலார் மின்சாரத்திற்கான நெட்வொர்க் கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்படும் என அறிவித்தார்.மேலும், இந்த அறிவிப்புகளை செயல்படுத்த எரிசக்தித்துறைக்கு கோரிக்கைகள் அனுப்பப்பட்டு, தமிழக மின் வாரியத்திற்கு ஏற்படும் இழப்பு குறித்து ஆராயப்பட்டது, அதில் மின்வாரிய தலைவர் இந்த அறிவிப்புகளை செயல்படுத்துவதால் ஏற்படும் இழப்பு ரூ.196.10 கோடியை வழங்க கோரிக்கை விடுத்தார்.
இவை அனைத்தையும் தீர ஆராய்ந்த பின்பு தமிழக அரசு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கான உச்சநேர நுகர்விற்கான மின்கட்டணத்தை 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதம் குறைக்கவும், தொழில்நிறுவனத்தினர் பயன்படுத்தும் சோலார் மின்சாரத்திற்கான நெட்வொர்க் கட்டணத்தை 50 சதவீதம் குறைக்கவும் ஒப்புதல் அளித்து, இதற்காக மின் வாரியத்திற்கு ஏற்படும் இழப்பு ரூ.196.10 கோடியையும் மானியமாக வழங்க ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்ட்டுள்ளது. இதற்கு முன் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று, 12 கிலோவாட் கீழுள்ள அனைத்து நிறுவனங்களிலும் 3-பி அட்டவணைக்கு பதிலாக 3-ஏ என்ற அட்டவணைக்கு மாற்ற நடைமுறைப்படுத்த உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.