Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நுகர்வோர் குறைதீர் ஆணையம் பிறப்பித்த நடிகர் சல்மான் கானுக்கு எதிரான பிடிவாரன்ட்டுக்கு இடைக்கால தடை: ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த யோகேந்திர சிங் படியால் என்பவர், நடிகர் சல்மான் கான் (60) மற்றும் ராஜ பான் மசாலா நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், ‘குங்குமப்பூ கலந்த ஏலக்காய் எனக்கூறி புற்றுநோயை உண்டாக்கும் அபாயகரமான போதைவஸ்து பொருட்களை விளம்பரம் செய்து மக்களை திசைதிருப்புகின்றனர்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 6ம் தேதி அந்த விளம்பரங்களை ஒளிபரப்ப நுகர்வோர் ஆணையம் தடை விதித்தது. இருப்பினும், ஜனவரி 9ம் தேதி வரை ஜெய்ப்பூர் மற்றும் கோட்டா போன்ற நகரங்களில் விளம்பர தட்டிகள் அகற்றப்படவில்லை என புகார் எழுந்தது.

இந்த வழக்கில் ஆஜராகாததால், நடிகர் சல்மான் கானுக்கு எதிராக மாவட்ட நுகர்வோர் ஆணையம் நான்கு முறை பிடிவாரன்ட் பிறப்பித்தது. இந்நிலையில், இந்த உத்தரவுகளை எதிர்த்து சல்மான் கான் தரப்பில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி அனூப் சிங் அமர்வு, சல்மான் கானுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்ட் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது. இதுகுறித்து சல்மான் கான் தரப்பு வக்கீல் வாதாடுகையில், ‘எனது கட்சிக்காரர் சில்வர் கோட்டிங் செய்யப்பட்ட ஏலக்காயை மட்டுமே விளம்பரம் செய்கிறார். அவர் பான் மசாலா அல்லது குட்கா பொருட்களை விளம்பரம் செய்யவில்லை.

மேலும், இந்த புகாரை அளித்தவர் ஒரு சமூக ஆர்வலரே தவிர, அவர் ஒரு நுகர்வோர் கிடையாது. போலி விளம்பரங்கள் தொடர்பான புகார்களை விசாரிக்க டெல்லியில் உள்ள ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பிற்குத்தான் அதிகாரம் உள்ளது. உள்ளூர் நுகர்வோர் ஆணையத்திற்கு அதிகார வரம்பு இல்லை’ என்று வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சல்மான் கான் வரும் 13ம் தேதி நுகர்வோர் ஆணையத்தில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என உத்தரவிட்டார். மேலும், விளம்பரங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் வாரன்ட் தொடர்பான முந்தைய உத்தரவுகளையும் நிறுத்தி வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.